

சென்னை: சென்னை மற்றும் ஈரோட்டில் ரூ.62.50 கோடி மதிப்பிலான கோயில்சொத்துகளை இந்து சமய அறநிலையத்துறை மீட்டுள்ளது.
சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான வணிக வளாக கட்டிடம் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ளது. இவைவணிக பயன்பாட்டுக்கு விடப்பட்டிருந்தது. இந்நிலையில், 4 கடைகளின் வாடகைதாரர்கள் நீண்ட காலமாக வாடகை செலுத்தாமல் இருந்தனர்.
இது தொடர்பான புகாரையடுத்து, சென்னை மாவட்ட உதவி ஆணையர்எம்.பாஸ்கரன், அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருவாய் மற்றும் காவல்துறையினர் உதவியுடன் அந்த கடைகளை பூட்டி சீல் வைத்து, ரூ.2.50 கோடிமதிப்பிலான கோயில் சொத்துகளை மீட்டார்.
அதேபோல், நீண்ட நாட்களாக ஆக்கிரமிப்பில் இருந்த ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் மொடச்சூர் தான்தோன்றியம்மன் கோயிலுக்கு சொந்தமான ரூ.60 கோடி மதிப்புள்ள 4.57 ஏக்கர் புன்செய் நிலத்தை, ஈரோடு உதவி ஆணையர் எம்.அன்னக்கொடி மீட்டு கோயில் வசம் ஒப்படைத்தார். அதன்படி இரு கோயில்களுக்கு சொந்தமான ரூ.62.50 கோடி மதிப்பீட்டிலான சொத்துகளை நேற்று அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.