

சசிகலாவின் கணவர் எம்.நடராஜனை ஜாமீனில் விடுதலை செய்யுமாறு சென்னை மாவட்ட முதன்மை செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கையில் பலியான தமிழர்களின் நினைவாக தஞ்சாவூரில் முள்ளிவாய்க்கால் முற்றம் அமைக்கப்பட்டது. அந்த முற்றத்துக்கான சிலைகளை அமைப்பது தொடர்பான விவகாரத்தில் நடராஜன் மற்றும் அவருடன் இருந்தவர்கள் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கராத்தே வீரர் ஹூசைனி காவல் துறையினரிடம் புகார் அளித்தார்.
இந்தப் புகாரின் பேரில் காவல் துறையினர் நடராஜனை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து தன்னை ஜாமீனில் விடுவிக்குமாறு கோரி நடராஜன் தாக்கல் செய்த மனுவை சைதாப்பேட்டை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் அவர் ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு மீது விசாரணை நடத்திய முதன்மை நீதிபதி ஆதிநாதன், சில நிபந்தனைகளின் அடிப்படையில் நடராஜனை ஜாமீனில் விடுதலை செய்யுமாறு வியாழக்கிழமை உத்தரவிட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இளவழகன் என்பவருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இதே வழக்கில் ஏர்போர்ட் மூர்த்தி என்பவர் உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்றுள்ளார்.