Last Updated : 08 Nov, 2017 09:11 AM

 

Published : 08 Nov 2017 09:11 AM
Last Updated : 08 Nov 2017 09:11 AM

பிரதமர் நரேந்திர மோடி சிறப்பாக ஆட்சி செய்கிறார்: முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி புகழாரம்

பிரதமர் நரேந்திர மோடி சிறப்பான முறையில் ஆட்சி செய்கிறார் என்று முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி புகழாரம் சூட்டினார்.

கருணாநிதி - மோடி சந்திப்பு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த சந்திப்பு தொடர்பாக கருணாநிதியின் மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி ‘தி இந்து’வுக்குஅளித்த சிறப்புப் பேட்டி:

கருணாநிதி - மோடி சந்திப்பை எப்படி பார்க்கிறீர்கள்?

நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமர். கருணாநிதி நாட்டின் மிக மூத்த அரசியல் தலைவர். இருவரும் மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவர்கள். உடல்நலக் குறைவால் ஓய்வெடுத்து வரும் எனது தந்தை கருணாநிதியையும், தாயார் தயாளு அம்மாளையும் பிரதமர் மோடி நேரில் சந்தித்து நலம் விசாரித்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

மோடி வருகை குறித்து உங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதா?

பிரதமர் வந்த 6-ம் தேதி காலையில்தான் எனக்கு தகவல் கிடைத்தது. முன்கூட்டியே தெரிந்திருந்தால் நானும் சென்னை வந்திருப்பேன். மோடி சந்திப்பு கருணாநிதியின் பல லட்சக்கணக்கான உண்மையான தொண்டர்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. இது கருணாநிதிக்கும், அவரது தொண்டர்களுக்கும் புத்துணர்வைத் தரும்.

இந்த சந்திப்பின் பின்னணியில் அரசியல் நோக்கம் இருப்பதாக நீங்கள் நினைக்கவில்லையா?

அதுபற்றி நான் கவலைப்படவில்லை. கருணாநிதியை சந்தித்த மோடி அவரது கரங்களைப் பற்றிக்கொண்டு, பிரதமர் இல்லத்துக்கு ஓய்வெடுக்க வருகிறீர்களா எனக் கேட்டது என்னை நெகிழச் செய்துள்ளது. எனவே, இதற்கு அரசியல் நோக்கம் கற்பிக்க விரும்பவில்லை.

மோடி வருகைக்குப் பிறகு பாஜக தலைவர்களை தொடர்புகொண்டு பேசினீர்களா?

மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்தேன். மேலும் எனது பெற்றோரை நேரில் சந்தித்து நலம் விசாரித்த பிரதமர் மோடிக்கு தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளேன்.

கருணாநிதி - மோடி சந்திப்பு தமிழக அரசியலில் ஏதாவது தாக்கத்தை ஏற்படுத்துமா?

மூத்த அரசியல் தலைவருக்கு நாட்டின் பிரதமர் அளித்த மரியாதையே இந்த சந்திப்பு. இது மோடியின் அரசியல் நாகரிகத்தை வெளிப்படுத்துகிறது. மோடி சிறப்பான முறையில் ஆட்சி செய்கிறார். ‘தினத்தந்தி’ நாளிதழின் பவள விழாவில் மோடியின் பேச்சு அவரது ஆளுமைத் திறனை வெளிப்படுத்தியது. நாட்டின் முன்னேற்றத்துக்காக அவர் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள் கிறேன்.

கடந்த வாரம் கருணாநிதியை சந்தித்தீர்களே, அவரது உடல்நிலை எப்படி உள்ளது?

அண்ணன் மு.க.முத்துவின் பேரன் திருமணத்தில் அப்பாவை குடும்பத்துடன் சந்தித்தேன். என்னை அடையாளம் கண்டு, கைகளை பற்றிக் கொண்டு அவர் பேச முற்பட்டார். அந்தத் தருணம் மிகவும் உணர்ச்சிகரமானதாக இருந்தது. அவரது உடல்நிலையில் தற்போது நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு மு.க.அழகிரி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x