Published : 13 Nov 2017 10:07 AM
Last Updated : 13 Nov 2017 10:07 AM

அரசு உத்தரவை பின்பற்றவில்லை; மழைநீர் வடிகாலில் தொடர்ந்துகழிவுநீரை விடும் குடிநீர் வாரியம்: அலட்சியம் காட்டும் மாநகராட்சி

கழிவுநீரை கையாள்வது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை மீறி, சென்னை குடிநீர் வாரியம் தொடர்ந்து கழிவுநீரை மழைநீர் வடிகாலில் விட்டு வருகிறது. இதை கண்டுகொள்ளாமல் சென்னை மாநகராட்சி அலட்சியம் காட்டி வருகிறது.

சென்னை மாநகராட்சி உள்ளிட்ட அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும், கழிவுநீரை மழைநீர் வடிகாலில் விடக்கூடாது என்று உத்தரவிட்டுள்ள தமிழக அரசு, கழிவுநீரை கையாள்வதற்கான விதிமுறைகளை கடந்த 2014-ம் ஆண்டு உருவாக்கி அதை செயல்படுத்தவும் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை குடிநீர் வாரியம், கழிவுநீர் குழாய்களில் அடைப்பை நீக்குவதற்காக லாரிகள் மூலமாக உறிஞ்சும் கழிவுநீரை சென்னை மாநகரப் பகுதிகளில் மழைநீர் வடிகால்கள் மற்றும் மழைநீர் கால்வாய்களில் தொடர்ந்து விட்டு வருகிறது. புளியந்தோப்பு வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகில் தொடர்ந்து மழைநீர் வடிகாலில், கழிவுநீர் விடப்பட்டு வருகிறது.

தனியார் கழிவுநீர் லாரிகள் இவ்வாறு செய்தால், அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் படைத்த சென்னை குடிநீர் வாரியமே இத்தகைய செயல்களில் ஈடுபடுவது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை குடிநீர் வாரியத்தின் அனைத்து வாகனங்களிலும் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுவதாக சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. ஒரு பகுதியில் எடுக்கப்பட்ட கழிவுநீரை, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அல்லது கழிவுநீரேற்று நிலையத்துக்கு கொண்டு செல்லாமல், வேறு இடத்தில் பல நிமிடங்கள் லாரிகள் நிறுத்தப்படுவதை ஜிபிஎஸ் கருவி மூலமாக எளிதில் கண்டுபிடித்துவிட முடியும். ஆனால் மழைநீர் வடிகாலில் கழிவுநீர் விடுவதை குடிநீர் வாரிய தலைமை அலுவலகம் தடுக்க முற்படவே இல்லை. சம்மந்தப்பட்ட வார்டின் குடிநீர் வாரிய பொறியாளரும் இதை கண்டுகொள்வதில்லை.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயனிடம் கேட்டபோது, சென்னை குடிநீர் வாரிய மேலாண் இயக்குநரிடம் தெரிவித்து, மழைநீர் வடிகாலில் கழிவுநீர் விடுவது தடுக்கப்படும் என்றார்.

இது போன்ற நிகழ்வுகள் நடைபெற்று, குடிநீர் வாரியத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றால், சம்மந்தப்பட்ட கழிவுநீர் லாரியின் தற்காலிக ஓட்டுநரை அந்த பணியில் இருந்து நீக்குவதுடன் தங்கள் நடவடிக்கையை முடித்துக்கொள்வது வழக்கம்.

இதுபோன்ற விதிமீறல்களை நிரந்தரமாக தடுக்க, எடுக்க இருக்கும் நடவடிக்கைகள் குறித்து சென்னை குடிநீர் வாரிய தலைமை அலுவலக அதிகாரிகளிடம் கேட்டபோது, ஏற்கெனவே கழிவுநீரை மழைநீர் வடிகாலில் விடக்கூடாது என்று பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதை நிரந்தரமாக தடுக்க, சம்பவம் நடக்கும் பகுதியின் வார்டு பொறியாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x