

ஆளுநரின் ஆய்வுக்கூட்டங்கள் தொடர வேண்டும் என்பதே மக்களுடைய எதிர்பார்ப்பாக உள்ளது என பாஜக தேசிய செயலர்களில் ஒருவரான எச்.ராஜா கூறியுள்ளார்.
அண்மையில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கோவையில் மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இந்நிலையில், இது குறித்து பாஜக தேசிய செயலர்களில் ஒருவரான எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், "மேதகு ஆளுநர் அவர்கள் கோவையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது இயல்பானது, வரவேற்கத்தக்கது. இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் அரசியல் காரணங்களுக்காக எதிர்க்கின்றனர். மத்திய அரசு திட்டங்களில் நடக்கும் ஊழல்கள் அதிகரித்துள்ளநிலையில் ஆளுநர் அவர்களின் ஆய்வு அதிகரிக்கப்பட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இன்று (வியாழக்கிழமை) மீண்டும் ஒரு ட்வீட்டை பதிவு செய்துள்ள எச்.ராஜா, "தனது ஆய்வுக் கூட்டங்கள் மற்ற மாவட்டங்களில் தொடரும் என மேதகு ஆளுநர் கூறியுள்ளார். தொடர வேண்டும் என்பதே மக்களுடைய எதிர்பார்ப்பு" எனக் கூறியுள்ளார்.