Published : 11 Nov 2017 11:06 AM
Last Updated : 11 Nov 2017 11:06 AM

சீர்காழி அருகே சாலை வசதி இல்லாததால் இடுப்பளவு நீரில் நடந்து பள்ளி செல்லும் மாணவர்கள்

நாகை மாவட்டம் சீர்காழி அருகே சாலை வசதி இல்லாததால், வயல்வெளியில் தேங்கியுள்ள இடுப்பளவு நீரில் இறங்கி நாள்தோறும் பள்ளிக்குச் சென்று வருகின்றனர் அப்பகுதியைச் சேர்ந்த மாணவர்கள்.

சீர்காழியை அடுத்த எருக்கூர் வள்ளுவர் தெருவில் கடந்த 1942-ம் ஆண்டு 50-க்கும் மேற்பட்டவர்கள் குடியேறினர். அன்று முதல் இதுவரை இப்பகுதிக்கு சாலை வசதி உட்பட அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை. இதனால், இங்குள்ளவர்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளுக்கும், பள்ளி, கல்லூரி மற்றும் மருத்துவமனை ஆகியவற்றுக்கும் வீடுகளை சுற்றியுள்ள விளை நிலங்கள் வழியாகத்தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. மழைக்காலங்களில் வயல்பகுதியில் தேங்கும் மழைநீரில் இறங்கி நடந்து செல்லும் நிலை உள்ளது.

தங்களுக்கு முறையான சாலைவசதி செய்து தரக் கோரி, மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர் உள்ளிட்டோரிடம் பலமுறை மனு அளித்தும், இதுவரை சாலை வசதி செய்யப்படவில்லை.

இந்நிலையில், தற்போது பெய்துவரும் வடகிழக்குப் பருவ மழையின் காரணமாக இவர்களின் குடியிருப்புகளை சுற்றிலும் மழைநீர் குளம்போல தேங்கியுள்ளது.

தண்ணீர் வடிய வழியில்லாததால் வள்ளுவர்தெரு பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் தங்களது அத்தியாவசிய தேவைகளுக்கும், அப்பகுதி மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கும் செல்ல வயல் பகுதியில் தேங்கியுள்ள இடுப்பளவு தண்ணீரில் இறங்கி நடந்து சென்று வருகின்றனர். வயல்வெளியில் தேங்கியுள்ள இடுப்பளவு தண்ணீரில் இறங்கி நடந்து மறுபக்கம் சென்று, அங்கு நீரில் நனைந்த ஆடைகளை கழற்றிவிட்டு, கையில் எடுத்து வந்த மாற்று ஆடைகளை அணிந்து கொண்டு மாணவர்கள் பள்ளிக்கு செல்கின்றனர்.

இந்நிலையில், மீண்டும் இப்பகுதியில் தொடர் மழை பெய்தால் தங்களது வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும் என அச்சம் தெரிவிக்கும் அப்பகுதி மக்கள், தங்களுக்கு விரைவில் சாலை வசதி செய்து கொடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x