Published : 03 Nov 2017 08:42 AM
Last Updated : 03 Nov 2017 08:42 AM

தென் தமிழகம், டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி - அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் கே.பழனிசாமி ஆலோசனை

வங்கக்கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதால் தென் தமிழகம், டெல்டா மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழை பாதிப்புகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களுடன் முதல்வர் கே.பழனிசாமி நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார்.

தமிழகத்தில் அக்டோபர் 26-ம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் திங்கட்கிழமை இரவு வரை கடலோர மாவட்டங்களில் கனமழை கொட்டியது. அதைத் தொடர்ந்து 3 நாட்களாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக வடகடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் சாலைகள், குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்தது.

தாம்பரம் அடுத்த முடிச்சூர், வரதராஜபுரம் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததால் பலர் வீடுகளை விட்டு வெளியேறி உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தஞ்சமடைந்தனர். இந்தப் பகுதிகளில் சிறப்பு அதிகாரி அமுதா, ஆட்சியர் பொன்னையா ஆகியோர் பார்வையிட்டு மழைநீரை அகற்ற ஏற்பாடு செய்தனர். தண்ணீர் தேங்கிய பகுதிகளில் இருந்து 250-க்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர். தற்போது மழைநீர் வடியத் தொடங்கியதால் பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர்.

கனமழை வாய்ப்பு

இந்நிலையில், வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இதனால், தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலசந்திரன் நேற்று கூறியதாவது:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தென் தமிழகம் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. இந்நிலையில், இலங்கை அருகே நிலவி வந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் விளைவாக தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.

இதன் காரணமாக, அடுத்த 2 நாட்களில் தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும் கடலோர மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்யும். தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய டெல்டா மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்யக்கூடும். இப்பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள், மீன்பிடிக்க செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும். சென்னையில் அவ்வப்போது லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முதல்வர் ஆலோசனை

கனமழையால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களின் பல பகுதிகள் நீரில் மிதக்கின்றன. அப்போது முதல்வர் கே.பழனிசாமி சேலத்தில் இருந்தார். இதுகுறித்து சர்ச்சை கிளம்பியது. இந்நிலையில், நேற்று முன்தினம் முதல்வர் சென்னை திரும்பினார். நேற்று காலை தலைமைச் செயலகம் வந்த அவர், பல்வேறு நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு பகல் 12 மணிக்கு பருவமழை பாதிப்புகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.

இதில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், பி.தங்கமணி, கே.பி.அன்பழகன், டி.ஜெயக்குமார், சி.விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், வருவாய் நிர்வாக ஆணையர் கே.சத்யகோபால், வருவாய்த்துறை செயலர் பி.சந்திரமோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பருவமழை தீவிரமடையும்போது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கூடுதல் நிதி ஒதுக்கீடு, பலியானவர்கள் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்குவது குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இதற்கிடையே சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று மாலை முதல் மீண்டும் மழை பெய்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x