சர்வதேச நிகழ்வுகளில் மதுபானம் பரிமாற உரிமம்: பேரவையில் ஒப்புதல் பெறப்பட்டதா? - ஐகோர்ட் கேள்வி

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: “சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வுகளில் மட்டும் மதுபானம் பரிமாற உரிமம் வழங்கும் வகையில் தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தம் சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு, ஒப்புதல் பெறப்பட்டதா?” என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

திருமண மண்டபங்கள், விருந்து நிகழ்வுகள், வணிக வளாகங்கள், விளையாட்டு மைதானங்களில் மதுபானங்கள் பரிமாற வசதியாக தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகளில் திருத்தம் செய்து, தமிழக அரசு சிறப்பு உரிமத்தை அறிமுகப்படுத்தியது. பின்னர், பொது இடங்களான திருமண மண்டபங்கள் உள்ளிட்ட இடங்களில் மதுபானம் பரிமாற வகை செய்யும் விதிகள் ரத்து செய்யப்பட்டு, சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வுகளில் மட்டும் மதுபானம் பரிமாற உரிமம் வழங்கும் வகையில் புதிய அரசாணை பிறப்பிக்கப்பட்டது.இந்த அரசாணையை எதிர்த்து வழக்கறிஞர்கள் சமூக நீதி பேரவையின் தலைவர் வழக்கறிஞர் பாலு சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வுகளில் மதுபானம் பரிமாறும் வகையில் உரிமம் வழங்குவது தொடர்பான அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் திங்கட்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வுகளில் மதுபானம் வழங்க வகை செய்யும் வகையில் விதிகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள், சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு, ஒப்புதல் பெறப்பட்டதா என கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி அமர்வு, சட்டப்பேரவையில் வைக்காவிட்டால் அந்த விதிகளுக்கு எந்த சட்ட வலுவும் இல்லை, என்று தெரிவித்தனர்.

இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் விதித்த இடைக்கால தடை, திருத்த விதிகளை சட்டப்பேரவையில் தாக்கல் செய்ய தடையாக இருக்காது எனத் தெரிவித்த நீதிபதிகள், திருத்த விதிகள் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டதா? என விளக்கமளிக்க அரசு தலைமை வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 11ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in