

மதுரை: “மதுரை மக்கள் எப்போதுமே நன்றி உள்ளவர்கள். அவர்கள் வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக இருப்பார்கள்” என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
அதிமுக பொதுச் செயலாளராக கே.பழனிசாமி பொறுப்பேற்ற பிறகு அக்கட்சியின் முதல் மாநில மாநாடு வரும் ஆகஸ்ட் மாதம் 20-ம் தேதி, மதுரையில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டுப் பணிகளை அதிமுகவினர் விறுவிறுப்பாக மேற்கொண்டுள்ளனர். இந்த மாநாட்டை முன்னிட்டு பொதுமக்கள், மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அதிமுக ஜெ. பேரவை சார்பில் அதன் மாநில செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் தலைமையில் அக்கட்சியினர் மாணவர்கள், பொதுமக்களிடம் மரக்கன்றுகளை வழங்கினர்.
மாநாடு தொடங்குவதற்குள் ஒரு லட்சம் மரக்கன்றுகளை பொதுமக்களிடம் வழங்கி, அதனை சாலையோரங்களில், குடியிருப்புகளில் நடுவதற்கு அதிமுகவினர் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டனர். முதற்கட்டமாக மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் உள்ள ஆட்டோ தொழிளார்கள், கல்லூரி மாணவர்கள், சாலையோர வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்.
அப்போது செய்தியாளர்களிடம் ஆர்.பி.உதயகுமார் கூறும்போது, “மதுரை மாவட்டத்துக்கு கடந்த அதிமுக ஆட்சியில் கே.பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது எய்ம்ஸ் மருத்துவமனை, ரூ.1,296 கோடியில் குடிநீர் திட்டம், ரூ.30 கோடியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காளவாசல் அருகே உயர்மட்ட மேம்பாலம், குருவிக்காரன் சாலை, ஓபுளாபடித்துறை, பாண்டி கோவில் ஆகிய இடங்களில் உயர்மட்ட மேம்பாலம், ரூ. 384 கோடியில் வைகை நதிக்கரையில் இரண்டு வழி சாலைகள், வைகை ஆற்றின் குறுக்கே இரண்டு தடுப்பனைகள், 4 புதிய வட்டங்கள், 2 புதிய கோட்டங்கள் உள்பட ஏராளமான திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
மதுரை மக்கள் எப்போதுமே நன்றி உள்ளவர்கள். அவர்கள் வரும் மக்களவைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக இருப்பார்கள். வரும் ஆகஸ்ட் 20-ம் தேதி அதிமுக மாநாட்டை முன்னிட்டு, ஒரு லட்சம் குடும்பங்களை சந்தித்து மாநாட்டுக்கு அழைப்பதோடு அவர்களிடம் பசுமையை பற்றி விழிப்புணர்வை மேற்கொள்வோம். ஒரு லட்சம் மரக்கன்றுகளை பொதுமக்களுக்கு வழங்க உள்ளோம்.
மதுரையை பசுமைமையாக மாற்றுவதற்கு அதிமுக இந்த மாநாட்டில் செய்யும் சிறு முயற்சியாக இந்த முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளோம். அடுத்தடுத்து தொடர்ந்து இந்த மரக்கன்றுகள் வழங்கும் பணியை ஜெ. பேரவை மதுரை மாவட்டத்தில் மேற்கொள்ளும். ஓர் இயக்கமாக இந்த நிகழ்ச்சியை மேற்கொள்ளும்போது எதிர்காலத்தில் மதுரை மாவட்டம் பசுமை பூமியாக மாறும். மதுரை மாநாட்டில் 10 லட்சம் மக்களை பங்கேற்க உள்ளனர். இந்த மாநாடு தமிழக, இந்திய வரலாற்றில் மட்டுமல்லாது, உலக வரலாற்றில் இடம் பிடிக்கும் வகையில் இருக்கும்” என்று அவர் தெரிவித்தார்.