தமிழகத்தில் காவலர் - பொதுமக்கள் நல்லுறவைப் பேண 250 காவல் நிலையங்களில் ரூ.10 கோடியில் வசதிகள்

காவல் நிலையம் | கோப்புப் படம்
காவல் நிலையம் | கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: காவலர்கள் மற்றும் பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்தும் வகையில் காவல் நிலையங்களில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் சிறப்பு வசதிகள் ஏற்படுத்திட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "காவல் துறையினர் பொதுமக்களை நண்பர்களாகக் கருதி, அவர்களிடம் கண்ணியத்துடனும், கருணையுடனும் நடந்து கொள்வதை உறுதி செய்ய தமிழக அரசு பல பயனுள்ள நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. காவலர்கள், மக்கள் தொடர்பை மேம்படுத்த காவல் பணியாளர்களுக்கு அண்ணா நிருவாகப் பணியாளர் கல்லூரி உதவியுடன் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் காவல் துறை, பொதுமக்கள் இடையே “அன்பான அணுகுமுறை” என்ற நிலையை பேணிப்பாதுகாக்க இவ்வரசு உறுதிபூண்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக, காவல் நிலையங்களை அணுகும் பொதுமக்களின் வசதிக்காக முதற்கட்டமாக 250 காவல் நிலையங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் செலவில் வரவேற்பறை, பார்வையாளர்களுக்கான கழிப்பறைகள், குடிநீர் வசதிகள் மற்றும் காத்திருப்பு கொட்டகைகள் ஆகியவை மொத்தம் 10 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் என்று தமிழக முதல்வரால் 2023-2024-ம் ஆண்டுக்கான காவல் துறை மானியக் கோரிக்கையின்போது தமிழக சட்டமன்றப் பேரவையில் அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில், காவலர் மற்றும் பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்தும் பொருட்டு 250 காவல் நிலையங்களில், வரவேற்பறை, பார்வையாளர்களுக்கான கழிப்பறைகள், குடிநீர் வசதிகள் மற்றும் காத்திருப்பு கொட்டகைகள் போன்ற சிறப்பு வசதிகளை ஏற்படுத்திட ரூபாய் 10 கோடி வழங்குவதற்கு நிர்வாக ஒப்பளிப்பு செய்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இதன்மூலம், காவல் நிலையங்கள் நவீனமயம் ஆக்கப்படுவதோடு, அனைத்து தரப்பு மக்களும், குறிப்பாக மாற்றுத்திறனாளிகள், பெண்கள் மற்றும் வயதானவர்கள் அணுகக்கூடிய வகையிலும், அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்யும் விதமாகவும், பொதுமக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தும் இடமாகவும் காவல் நிலையங்கள் அமையும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in