Published : 18 Nov 2017 06:22 PM
Last Updated : 18 Nov 2017 06:22 PM

மதுவிலக்கு கேட்டு டெல்லியில் 200 நாள் போராடிய டேவிட் ராஜ் நாகர்கோவிலில் கைது

காந்தியவாதி சசிபெருமாள் இறப்புக்குப் பின்பு, குமரியில் மதுவிலக்குப் போராட்டங்கள் தீவிரமடைந்தது. இதில் பங்கெடுத்த டேவிட்ராஜ், அப்போது முதல் மதுவிலக்கு கோரி போராட்டங்கள் நடத்தி வருகிறார். அண்மையில் டெல்லி ஜந்தர்மந்தரில், நாடு முழுவதும் பூரண மதுவிலக்குகோரி கடந்த 200 நாள்கள் போராட்டம் நடத்தினார். இன்று நாகர்கோவிலில் போராடத் தொடங்கிய 40 நிமிடங்களிலேயே கைது செய்யப்பட்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் உண்ணாமலைக்கடையில் பொதுமக்களுக்கு இடையூறாக டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வந்தது. இதனை மூடக்கோரி அப்பகுதியைச் சேர்ந்த 5 கிராம மக்கள் சேர்ந்து, பலகட்டமாகப் போராட்டங்களை நடத்தி வந்தனர். இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தும் உண்ணாமலைக்கடைப் பகுதியில் இயங்கி வந்த டாஸ்மாக் கடை மூடப்படவில்லை. இதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர். கடந்த 2015ம் ஆண்டு இதில் கலந்து கொள்ள வந்த காந்தியவாதி சசிபெருமாள், செல்போன் டவர் மீது ஏறிப் போராடிய போது, பரிதாபமாக உயிர் இழந்தார். பின்னர் குமரி மாவட்டத்தின் பல இடங்களிலும் மதுவிலக்குப் போராட்டம் தீவிரம் அடைந்தது.

அப்போது ஆற்றூர் பகுதியில் உள்ள செல்போன் டவரின் மீது ஏறி போராட்டம் நடத்தினார் வாள்சண்டை வீரரான டேவிட்ராஜ். இதனால் போலீஸாரால் தாக்கப்பட்டார். இதில் பலத்த காயங்களோடு சில நாள்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதனைத் தொடர்ந்து விளையாட்டுப் போட்டிகளிலும் பங்கெடுக்க முடியாமல், தொடர்ந்து மதுவுக்கு எதிராக தன்னிச்சையாகப் போராட்டங்களை நடத்தி வருகிறார்.

அதன் ஒரு அங்கமாக கடந்த மே 1ம் தேதி முதல் பூரண மதுவிலக்கு கேட்டு, டெல்லி ஐந்தர்மந்தரில் போராட்டம் துவங்கினார். டெல்லி ஜந்தர்மந்தரில் போராட்டம் நடத்த உச்சநீதிமன்றம் தடைவிதித்தையடுத்து, 201வது நாளான கடந்த 14ம் தேதி போராட்டத்தை முடித்து விட்டு சொந்த ஊரான குமரி மாவட்டம் திரும்பினார்.

இதனிடையில், இன்று முதல் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடர் சத்தியாகிரகப் போராட்டத்தை தொடங்குவதாக டேவிட்ராஜ் அறிவித்திருந்தார். அதன்படி இன்று நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் முன்பு மதுவிலக்கு கோரி டேவிட்ராஜ் போராட்டத்தில் ஈடுபட்டார். அவர் மத்திய, மாநில அரசுகளே பூரண மதுவிலக்கை அமல்படுத்து என பதாகை வைத்திருந்தார். போராட்டம் துவங்கிய 40 நிமிடங்களில் போலீஸார் டேவிட்ராஜை கைது செய்தனர்.

டேவிட்ராஜ் கூறுகையில், ’’அதிமுக தேர்தல் அறிக்கையில் படிப்படியாக மதுவிலக்கு என அறிவித்ததை நிறைவேற்ற வேண்டும். டெல்லியில் நடத்திய தொடர் சத்தியாகிரகப் போராட்டத்தை இனி நாகர்கோவிலில் தொடர்வேன்’’ என்றும் கூறினார்.

கைது செய்யப்பட்ட டேவிட்ராஜை மாலையில் விடுவித்து விடுவோம் என போலீஸ் தரப்பில் தெரிவித்தனர். டேவிட்ராஜ் தினமும் வந்து போராட்டம் நடத்தப் போவதாகவும், போலீஸாரும் ஒவ்வொரு நாளும் கைது செய்து, மாலையில் விடுவிப்பார்கள் எனவும் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x