தமிழகத்தில் பயிற்சி மேற்கொள்ள வருமாறு மணிப்பூர் விளையாட்டு வீரர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் பயிற்சி மேற்கொள்ள வரும்படி மணிப்பூர் மாநில விளையாட்டு வீரர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த பயிற்சி வசதிகள் மற்றும் உள்கட்டமைப்புகளை வழங்குவதில் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்ந்து வருகிறது. தமிழக அரசு எடுத்துவரும் முன்னெடுப்பு திட்டங்களால், தேசிய மற்றும் சர்வதேச அளவில் பல்வேறு விளையாட்டுகளில் தமிழக விளையாட்டு வீரர்கள் அடுத்தடுத்து வெற்றிகளைப் பெற்று வருகின்றனர்.

விளையாட்டுப் போட்டிகளில் திறமைக்கு பெயர் பெற்ற மாநிலமான மணிப்பூரில் உள்ள தற்போதைய நிலையை தமிழகம் மிகுந்த கவலையுடனும், வேதனையுடனும் பார்க்கிறது. மணிப்பூர் எப்போதும் தேசிய மற்றும் சர்வதேச தரத்திலான சாம்பியன்களை, குறிப்பாக பெண் சாம்பியன்களை உருவாக்கி வந்துள்ளது. கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளை அடுத்த ஆண்டு (2024) நடத்துவதற்கான மாநிலமாக தமிழகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த போட்டியை சிறப்பாக நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ளன.

“யாதும் ஊரே யாவரும் கேளிர்” - எல்லா ஊரும் எனது ஊர்.எல்லா மக்களும் எனது உறவினர் என்று நினைத்து, அன்பே வாழ்வின் அடிப்படை ஆதாரம் என்று வாழ்ந்தால், இந்த வாழ்வு மிகவும் இனிமையானதாகத் திகழும் என்பதுதான் தமிழர் பண்பாட்டின் அடையாளமும், அடித்தளமும் ஆகும்.

அந்த வகையில், தற்போது மணிப்பூர் மாநிலத்தில் ஆசிய விளையாட்டு, கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் போன்ற தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளுக்கு பயிற்சி அளிக்க சாதகமற்ற சூழ்நிலை நிலவுவதால், அம்மாநிலத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் தமிழகம் வந்து பயிற்சிகள் பெறுவதற்கான ஏற்பாடுகளைச் செய்யும்படி அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் தெரிவித்துள்ளேன்.

இவ்விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு தமிழக அரசு விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் உயர்தர பயிற்சிகள் அளிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்து தரப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் உறுதி அளித்துள்ளார்.

மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டு வசதியை பயன்படுத்திக் கொள்ள அவர்களின் விவரங்களை அதாவது தங்கள் பெயர், முகவரி, அடையாளச் சான்று, தொடர்பு விவரங்கள், விளையாட்டு சாதனைகள் மற்றும் பயிற்சித் தேவைகள் போன்ற விவரங்களுடன் sportstn2023@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மற்றும் 8925903047 என்ற தொலைபேசி எண் ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in