Published : 16 Jul 2014 09:18 AM
Last Updated : 16 Jul 2014 09:18 AM

ஆன்-லைன் சந்தையில் அரசின் விலையில்லா பொருட்கள்

தமிழக அரசு வழங்கும் விலையில்லா பொருட்களைப் பெற்ற பயனாளிகள் அதனை ஆன்-லைன் சந்தை மூலம் விற்பனை செய்ய விளம்பரங்களை வெளியிட்டு வருவது, அதன் நோக்கத்தையே சிதைக்கும் வகையில் உள்ளது என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

கடந்த திமுக ஆட்சியில் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வழங்கப்பட்டது. ஏற்கெனவே ஒரு தொலைக்காட்சி இருக்க, சின்னதாய் அரசு வழங்கியதை சிலர் வீட்டின் வேறு இடங்களில் கூட வைத்து பயன்படுத்தினர். பலர் அப்போதே அதை விற்பனையும் செய்தனர்.

இந்தநிலையில் அதிமுக அரசு பொறுப்பேற்றவுடன் பல்வேறு விலையில்லா பொருட்களை வழங்கி வருகிறது. இதில் குறிப் பாக மாணவ, மாணவிகளுக்கு மடிக் கணினி, இல்லத்தரசிகளுக்கு மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகின்றன. இந்த பணியை தமிழக அரசின் சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை ஒருங்கிணைத்து செயல்படுத்தி வருகிறது.

ஆனால், இவை உண்மையில் இல்லாதோருக்கு பயன்பட்டதே தவிர மற்றவர்களுக்கு ஒரு சுமையாகவே உள்ளது. வீட்டில் ஏற் கெனவே மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறி இருப்பதால் சிலர் இவற்றை விற்பனை செய்து வருகின்றனர்.

தகவல் தொழில்நுட்ப உலகில் ‘தெளிவான’ எண்ணம் கொண்ட சிலர் தற்போது பிரபலமாகி வரும் ஆன்-லைன் சந்தையில் (ஓஎல்எஸ், க்விக்கர் போன்றவை மூலம்) வீட்டில் உள்ள பழைய பொருட்களை விற்பது போன்று அரசு வழங்கிய விலை யில்லா பொருட்களை விற்பனை செய்ய விளம்பரங்களை வெளியிட்டுள்ளனர்.

இதில் அரசு வழங்கிய மடிக்கணினி ரூ.9000 முதல் ரூ.10,000 வரையிலும், அரசு வழங்கிய மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறி போன்றவை ரூ.3,500 வரையிலும், அரசு வழங் கிய சைக்கிள் ரூ.1000 என்ற விலை யிலும் விற்பனைக்கு தயாராக உள்ளதாக விளம்பரங்கள் இந்த இணையதளங்களில் பளிச்சிடு கின்றன.

இதுகுறித்து சிறப்புத் திட்ட செய லாக்கத்துறை உயர் அலுவலர் ஒருவர் ‘தி இந்து’விடம் கூறியது: “அரசு விலையில்லாமல் வழங்கு கிறது என்றாலும் அவை மிகவும் மதிப்புமிக்கது என்பதை மக்கள் உணர வேண்டும். இந்த இலவச பொருட்கள் வழங்கப்பட்ட கிராமங் களுக்கு சென்று மக்களிடம் விசாரிக் கிறோம். ஒரு சிலர், மகளிடம் கொடுத்து விட்டேன், மகனிடம் கொடுத்துவிட்டேன், ஊரில் வைத்தி ருக்கிறோம் எனக் கூறுகின்றனர். இந்த பொருட்களை விற்பவர்களை எப்படி கையாள்வது என்பது தொடர்பாக அரசாணையில் எதுவும் சொல்லப்படவில்லை” என்றார்.

மாணவர்களின் கல்வி மேம் பாட்டுக்கென தலா ரூ.20,000 மதிப் புள்ள மடிக்கணினிகளை அரசு வழங்குகிறது. ஆனால், இவற்றை சிலர் விற்பனை செய்வதால் அரசின் நோக்கம் முழுமையாக நிறைவேறுகிறதா என்பது கேள்விக்குறிதான் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

தற்போது, விலையில்லா பொருட் களை வழங்கியதற்கான ஒப்புதல் மட்டும் பயனாளிகளிடம் இருந்து பெறப்படுகிறது. ஆனால், இதை ஒழுங்குபடுத்தி, உண்மையில் பயன் படுத்துவோருக்கு மட்டும் வழங்கலாம். இல்லையேல், இப்பொருட்களை விற்பனை செய்யக்கூடாது. மீறி விற்பனை செய்தால் சட்டப்படி யான நடவடிக்கைக்கு கட்டுப் படுகிறேன் என்ற உறுதி மொழி யையாவது பயனாளிகளிடம் பெறலாம் என்கின்றனர் அரசு அதிகாரிகள்.

ரூ.2,000 கோடி ஒதுக்கீடு

2014-15 ஆண்டில் 5.5 லட்சம் மாணவர்களுக்கு ரூ.1,100 கோடியில் மடிக்கணினி வழங்கப்படவுள்ளது. மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறிகள் 2011-12-ல் 25 லட்சம், 2012-13-ல் 35 லட்சம், 2013-14-ல் 35 லட்சம் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. 2014-15-ம் ஆண்டில் 35 லட்சம் குடும்பங்களுக்கு இப்பொருட்களை வழங்க ரூ.2,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அரசின் விலையில்லா பொருட்களை விற்க இணையதளங்களில் செய்யப்பட்டுள்ள விளம்பரங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x