மேகேதாட்டு வரைவு திட்ட அறிக்கையை தயாரிக்க கர்நாடக அரசுக்கு அளிக்கப்பட்ட அனுமதியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

மேகேதாட்டு வரைவு திட்ட அறிக்கையை தயாரிக்க கர்நாடக அரசுக்கு அளிக்கப்பட்ட அனுமதியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
Updated on
1 min read

சென்னை: மேகேதாட்டு அணைக்கான வரைவு திட்ட அறிக்கையை தயாரிக்க கர்நாடக அரசுக்கு அளிக்கப்பட்ட அனுமதியை, மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

மேகேதாட்டு என்ற இடத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. அங்கு வனத் துறைக்குச் சொந்தமான இடத்தில் நிலம் கணக்கெடுப்புப் பணிகளை மேற்கொள்ள 29 அதிகாரிகளை கர்நாடக அரசு நியமித்துள்ளது.

மேகேதாட்டு அணைக்கு அனுமதி அளிப்பது குறித்து காவிரி ஆணையக் கூட்டத்தில் விவாதிப்பதற்குகூட உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், அதை மீறி அணை கட்டுவதற்கான பணிகளை கர்நாடகம் மேற்கொண்டு வருவது கண்டிக்கத்தக்கது. கர்நாடக அரசின் இத்தகைய அத்துமீறல்கள் அனைத்துக்கும் காரணம், இந்த விவகாரத்தின் தொடக்கத்தில் மத்திய அரசு செய்த தவறுகள்தான். 2018-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் மேகேதாட்டு அணைக்கான வரைவு திட்ட அறிக்கையை தயாரிக்க மத்திய அரசு அளித்த அனுமதிதான் முதல் தவறாகும்.

இந்த அனுமதியைப் பயன்படுத்திதான், அணைக்கான விரிவான திட்ட அறிக்கையை கர்நாடகா தயாரித்து, காவிரி மேலாண்மை ஆணையத்தில் தாக்கல் செய்து, அதற்கு ஒப்புதல் கேட்டுக் கொண்டிருக்கிறது. இவை அனைத்தும் சட்டவிரோதமானவை. வரைவு திட்ட அறிக்கையை தயாரிக்க மத்திய அரசு அளித்த அனுமதி தவறு. அதை ரத்து செய்ய வேண்டும் என்று கூறித்தான், உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குத் தொடர்ந்துள்ளது.

வரைவு திட்ட அறிக்கைக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டு விட்டால், மேகேதாட்டு அணைக்கான விரிவான திட்ட அறிக்கை செல்லாததாகிவிடும். அப்போது, மேகேதாட்டு அணை குறித்த எந்த பணியையும் கர்நாடக அரசு மேற்கொள்ள முடியாது.

எனவே, மேகேதாட்டு அணைக்கான வரைவு திட்ட அறிக்கையை தயாரிக்க கர்நாடக அரசுக்கு அளிக்கப்பட்ட அனுமதியை மத்திய அரசு உடனே ரத்து செய்ய வேண்டும். அதேபோல, உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரான இத்தகைய செயல்களுக்கு தடை விதிக்க வேண்டும். கர்நாடக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கோரி,உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசுவழக்கு தொடர வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in