பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலையை உருவாக்கிய பாஜக: கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு

மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக நடைபெற்ற வன்கொடுமைகளைக் கண்டித்து திமுக மகளிரணி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற திமுக துணைப் பொது செயலாளர் கனிமொழி எம்.பி.,  தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., திமுக மாவட்டச் செயலாளர் நே.சிற்றரசு மற்றும்  மகளிரணி நிர்வாகிகள் உள்ளிட்டோர்.  படம்: எஸ்.சத்தியசீலன்
மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக நடைபெற்ற வன்கொடுமைகளைக் கண்டித்து திமுக மகளிரணி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற திமுக துணைப் பொது செயலாளர் கனிமொழி எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., திமுக மாவட்டச் செயலாளர் நே.சிற்றரசு மற்றும் மகளிரணி நிர்வாகிகள் உள்ளிட்டோர். படம்: எஸ்.சத்தியசீலன்
Updated on
1 min read

சென்னை: பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலையை பாஜக அரசு உருவாக்கியுள்ளதாக திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. கூறினார்.

மணிப்பூரில் பழங்குடியின பெண்கள் மீது நிகழ்த்தப்பட்ட கொடூர வன்முறையைக் கண்டித்து, திமுக மகளிரணி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமை வகித்தார். இதில், எம்.பி.க்கள் தமிழச்சி தங்கபாண்டியன், கலாநிதி வீராசாமி, சட்டப்பேரவை உறுப்பினர் நா.எழிலன், திமுக மகளிரணித் தலைவர் விஜயா தாயன்பன், செயலர் ஹெலன் டேவிட்சன், மகளிர் தொண்டரணிச் செயலர் நாமக்கல் ராணி, மாநில மகளிர் ஆணையத் தலைவர் குமாரி, சென்னை மேற்கு மாவட்டச் செயலர் நே.சிற்றரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசியதாவது: மணிப்பூர் கலவரமும், வன்முறையும் உலகையே உலுக்கிக் கொண்டிருக்கின்றன. கோயில், தேவாலயங்கள் உடைக்கப்பட்டுள்ளன. கிராமங்கள் பற்றி எரிகின்றன, பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகிஉள்ளனர்.

மத்திய உள்துறை அமைச்சர் மணிப்பூர் சென்றபோதும், அமைதி ஏற்படவில்லை. நமது பிரதமரோ வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு, தலைவர்களை சந்தித்துப் பேசி, இந்தியாவில் மதக் கலவரங்கள் இல்லை, மக்கள் ஒற்றுமையாக வாழ்கின்றனர் என்று பொய் சொல்லிக் கொண்டிருந்தார்.

வார்த்தைகளால் சொல்ல முடியாத கொடுமைகளுக்கு பெண்கள் உள்ளான வீடியோ வெளியான பிறகுதான், பிரதமர் மவுனத்தைக் கலைத்தார். அப்போதும் நாடாளுமன்றத்துக்குள் வந்து, பேசத் தயாராக இல்லை. ஜனநாயகத்தை அவமதிக்கும் வகையில், நாடாளுமன்றத்தின் வெளியே மட்டும் பேசினார் பிரதமர். இந்த விவகாரம் குறித்து விவாதிக்கக்கூட பாஜக தயாராக இல்லை.

ஒவ்வொரு நாளும் `பாரத் மாதா கி ஜே' என்று கூறுகின்றனர். ஆனால், அவர்கள் எந்த மாதாவைக் காப்பாற்றுகிறார்கள். மணிப்பூரில் பாதிக்கப்பட்ட பெண்கள் தாய்மார்கள் இல்லையா? பெண்ணை மதிக்கத் தெரிந்த சமூகத்தை உருவாக்குவதுதான் ஆட்சியாளர்களின் கடமை. ஆனால், இது பாஜகவினருக்குப் புரிவதில்லை.

பெண்களுக்கு எது நடந்தாலும் பரவாயில்லை என்று கருதும் அரசும், நடந்ததை தெரிந்துகொள்ள அக்கறையில்லாத அரசும் ஆட்சியில் இருக்க அருகதையற்றவை. மணிப்பூர் சம்பவத்துக்குப் பொறுப்பேற்று, ஆட்சியில் இருப்போர் தலைகுனிந்து, பதவி விலக வேண்டும். ஆனால் செய்ய மாட்டார்கள். மனசாட்சி இருந்தால்தானே நடவடிக்கை எடுப்பார்கள்.

தாய்நாடு என பெருமை பேசும் பாஜக அரசு, பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலையை உருவாக்கியுள்ளது. இது அரசியல் இல்லை. தலைமுறையினரின் பாதுகாப்புக்காகத்தான் பேசுகிறேன். தேர்தலுக்காக நிகழ்த்தப்பட்ட கலவரங்களில், நியாயம் கிடைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் போராடிக் கொண்டிருக்கின்றன.

இவ்வாறு கனிமொழி எம்.பி. பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in