Published : 04 Nov 2017 08:57 AM
Last Updated : 04 Nov 2017 08:57 AM

பழவேற்காடு அருகே நீரில் மூழ்கிய சாலை: மழைநீர் புகுந்ததால் தீவுகளாக மாறிய 5 மீனவ கிராமங்கள்

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு அருகே மழைநீரில் சாலை மூழ்கியதால் 5 மீனவ கிராமங்கள் தீவுகளாக உருமாறியுள்ளன.

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் பொன்னேரி, பழவேற்காடு, சோழவரம், செங்குன்றம், மாதவரம், ஆவடி, திருநின்றவூர் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகள், காலி மனைகளில் மழைநீர் தேங்கியுள்ளது.

செங்குன்றம் அருகே தீர்த்தங்கரியம்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் புழல் ஏரியிலிருந்து செல்லும் உபரிநீர் வெளியேறும் கால்வாய் பகுதி ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அந்த கால்வாயில் எளிதாக மழைநீர் செல்ல இயலாததால், பாலவாயல்- குமரன் நகர், சன் சிட்டி உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகள் மழைநீரால் சூழப்பட்டுள்ளன. வீடுகளிலிருந்து வெளியேற முடியாமல் தவித்த 53 பேரை தீயணைப்பு வீரர்கள் ரப்பர் படகுகள் மூலம் மீட்டனர்.

பொன்னேரி அருகே உள்ள காணியம்பாக்கம் பகுதியில், வாய்க்கால் புறம்போக்கு பகுதியில் உள்ள 8 வீடுகள் மழைநீரில் மிதக்கின்றன. அந்த வீடுகளில் இருந்த 30 பேர் வெளியேற்றப்பட்டு, அரசு பள்ளி ஒன்றில் பாதுகாப்பாக தங்க வைக்கப் பட்டுள்ளனர்.

பழவேற்காடு அருகே நெடுஞ்சாலையோடு இணையக் கூடிய சாட்டாங்குப்பம் சாலை சுமார் ஒரு கி.மீ. தூரத்துக்கு மழை வெள்ளத்தில் மூழ்கிவிட்டது. இதனால் சாட்டாங்குப்பம், எடமணிக்குப்பம், அகமது நகர், பசியாவரம் உள்ளிட்ட 5 கிராமங்கள் தீவுகளாக மாறிவிட்டன. இந்த கிராமங்களில் வசிக்கும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அத்தியாவசிய தேவைகளுக்காக பழவேற்காடு பகுதிக்கு செல்ல பழவேற்காடு ஏரியில் படகு மூலம் ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

ஆவடியில் உள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதி, வசந்தம் நகர், பட்டாபிராம், கோயில் பதாகை உள்ளிட்ட பகுதிகளில், கழிவுநீருடன் மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால், பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படும் சூழல் நிலவுகிறது.

மாதவரம் பகுதியில், சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ் சாலையில் சுமார் 3 அடி உயரத்துக்கு மழைநீர் தேங்கியுள்ளது. இதனால், நேற்று அப்பகுதியில் வாகன ஓட்டிகள் பல்வேறு இன்னலுக்கு உள்ளாகினர்.

அதே நேரத்தில், மாவட்டத்தில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் மழைநீர் எளிதாக வெளி யேற ஏதுவாக கால்வாய்களில் ஏற்பட்ட அடைப்புகளை சரி செய்தல் உள்ளிட்ட பணிகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x