

கோவை: எங்கள் ஆட்சி தான் மக்களை காப்பாற்ற முடியும் என, சசிகலா தெரிவித்தார். கோவை விமான நிலையத்தில் நேற்று இரவு செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது:
கொங்கு மக்கள் எடுக்க வேண்டிய நேரத்தில் சரியான முடிவை எடுப்பார்கள். அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்வேன். அனைவரையும் ஒன்றிணைப்பது தான் என் பணி. தமிழகத்தின் நிதி நிலை திமுகவினருக்கு நன்றாக தெரியும். கொடுக்க முடியாத ஒன்றை கொடுப்பேன் என சொல்வது மக்களை ஏமாற்றும் செயல் என நினைக்கிறேன். அரசு செயல்கள் ஆமை வேகத்தில் நடக்கின்றன.
தமிழ்நாட்டில் மக்களுக்கு என்ன நடக்கிறது என்பது குறித்து பேச ஊடகத்தினர் மறுக்கின்றனர். மக்களுக்காக யாரும் பேச மறுப்பது வருத்தமாக உள்ளது. மத்தியில் காங்கிரஸ், தமிழகத்தில் திமுக ஆட்சியில் இருந்த போது நானும் அமலாக்கத் துறையினரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு கைது செய்யப்பட்டேன்.
என் கணவர் உள்ளிட்ட யாரும் என்னை சந்திக்க அனுமதிக்கவில்லை. அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறை நடவடிக்கைக்கு ஒத்துழைத்திருக்க வேண்டும். சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் உள்ளதா என்ற நிலை காணப்படுகிறது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. தக்காளி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
அணை, நீர் பங்கீடு உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பாக கர்நாடக அரசுடன் பேச்சு நடத்தி சுமுக தீர்வு காண வேண்டும். திமுக-வுக்கு வாக்களித்ததால் மக்கள் சிரமப்படுகிறார்கள். எங்கள் ஆட்சி தான் மக்களை காப்பாற்ற முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.