Published : 24 Jul 2023 06:54 AM
Last Updated : 24 Jul 2023 06:54 AM
சென்னை: பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையத்தில் தற்காலிக அடிப்படையில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு ஆக.18-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என சென்னை ஆட்சியர் மு.அருணா அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 24 மணி நேர உடனடி மற்றும் அவசர சேவைகளை வழங்குவதற்கான நோக்கத்துடன் பெண்கள் உதவி மையத்தை அமைப்பதற்கான ஒரு புதிய திட்டத்தை பெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி அமைச்சகம் தொடங்கியுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் சென்னையில் செயல்படும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் தற்காலிக அடிப்படையில் வழக்குஅலுவலர்கள் (3), பன்முக உதவியாளர் ஆகிய காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வழக்கு அலுவலர்கள் பணிக்கு சமூகப் பணியில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கும் வகையில் அரசு மற்றும் அரசு சாரா திட்டங்கள் அல்லது திட்டங்களுடன் தொடர்புடைய நிர்வாகத்தில் ஓராண்டு பணியாற்றிய அனுபவம் மற்றும் உளவியல் ஆலோசனையில் குறைந்தபட்சம் ஓராண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
இவ்வாறான கல்வித் தகுதி மற்றும் அனுபவம் கொண்ட 35 வயதுக்குட்பட்ட உள்ளூரைச் சேர்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். வாகனம் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். மாதஊதியம் ரூ.15 ஆயிரம் வழங்கப்படும்.
உள்ளூர் பெண்கள்: பன்முக உதவியாளர் பணிக்கு ஏதேனும் அலுவலகத்தில் பணிபுரிந்த அனுபவம் கொண்ட சமையல் தெரிந்த உள்ளூர் பெண்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியம் ரூ.6,400 ஆகும். வரும் ஆக.18-ம் தேதிக்குள் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில் விண்ணப்பதாரர்கள் நேரில் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT