

சென்னை: அடையாறு பக்கிங்ஹாம் கால்வாய் கரையில் மரக்கன்றுகளுக்கான நாற்றங்கால் உருவாக்கும் பணியை, மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று தொடங்கி வைத்தார்.
சென்னை அடையாறு இந்திரா நகர் பகுதியில் உள்ள பக்கிங்ஹாம் கால்வாய் கரையில் மாநகராட்சியின் அடர்வனக்காடு அமைந்துள்ளது. இப்பகுதியில் சென்னை மாநகராட்சியுடன், சென்னை மிராக்கி ரிட் ரோட்டரி சங்கம் மற்றும் கம்யூனிட்ரீ அமைப்பு ஆகியவை இணைந்து 32,320 மரக்கன்றுகளை வளர்க்கத் திட்டமிடப்பட்டிருந்து.
இதையொட்டி அடையாறு அடர்வனக் காட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மரக்கன்றுகளுக்கான நாற்றங்கால் உருவாக்கும் பணியை, சென்னை மாநகராட்சியின் ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று தொடங்கி வைத்தார். இதில் கொய்யா மற்றும் நாட்டு மரக்கன்று விதைகளைக் கொண்டு நாற்றங்கால் உருவாக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
இந்த நாற்றங்கால் உருவாக்கும் பணியானது 3 வாரகாலத்தில் முடிவடையும். பின்னர் இச்செடிகள் பசுமையான சுற்றுச்சூழலுக்கும், மக்களுக்கும் பயன்படும் வகையில் மாநகராட்சிப் பகுதிகளில் நடப்பட்டு, பராமரிக்கப்படவுள்ளன.
இந்நிகழ்வில் அப்போலோ மருத்துவமனையின் துணைத் தலைவர் பிரீத்தா ரெட்டி, ரோட்டரி சங்கத்தின் மாவட்ட ஆளுநர் மகாவீர் போத்ரா, ரோட்டேரியன் சிவபாலா ராஜேந்திரன், கம்யூனிட்ரீ அமைப்பின் நிறுவனர் ஹபீஸ்கான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.