தொழிலாளர் சட்டங்கள் குறித்து தொழிற்சங்கங்கள் விவாதிக்க வேண்டும்: முன்னாள் நீதிபதி கே.சந்துரு வலியுறுத்தல்

தொழிலாளர் சட்டங்கள் குறித்து தொழிற்சங்கங்கள் விவாதிக்க வேண்டும்: முன்னாள் நீதிபதி கே.சந்துரு வலியுறுத்தல்
Updated on
1 min read

சென்னை: தொழிலாளர் சட்டங்கள் குறித்து தொழிற்சங்கங்கள் விவாதிக்க வேண்டும் என்று ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தெரிவித்தார்.

அகில இந்திய ரயில் ஓட்டுநர்கள் (லோகோ பைலட்கள்) சங்கத்தின் சார்பில், லோகோ பைலட்டுகளின் வேலை- ஓய்வு சமநிலையின்மை மற்றும் ரயில்வே பாதுகாப்பு என்ற தலைப்பில் கருத்தரங்கு சென்னை மேற்கு மாம்பலத்தில் நேற்று நடைபெற்றது. கருத்தரங்கில் ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு பேசியதாவது:

ரயில் ஓட்டுநருக்கு தனி கழிப்பறை வசதி இல்லாமல் இருக்கிறது. இதை அமைப்பதில் என்னபிரச்சினை இருக்கிறது. தமிழகத்தில் துணை சிறையில் பெண் கைதிக்குத் தனி கழிப்பறை கிடையாது. இது தொடர்பாக நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு, சிறையில் பெண் கைதிகளுக்குக் கழிப்பறை அமைத்தார்கள். மகப்பேறு விடுமுறை, அரசியல் அமைப்பின் அடிப்படை உரிமையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொழிலாளர் சட்டங்கள் குறித்து தொழிற்சங்கங்கள் விவாதிக்க வேண்டும். ஏனெனில், தொழிலாளர்கள் இதுவரை பெற்று வந்த உரிமைகளை இழக்கும் சூழ்நிலை உள்ளது. எனவே, தொழிலாளர் சட்டங்கள் குறித்து அதிக அளவில் கருத்தரங்கங்கள் நடைபெற வேண்டும்.

தனியார்மயமாக்கலை பொருத்தவரை, அலுவலக உதவியாளர், கார் ஓட்டுநர் என கீழ்மட்ட அளவில் செய்கிறார்கள். இதை யாரும் கண்டுகொள்வது இல்லை. இதன்பிறகு, இது படிப்படியாக வளர்ந்து, சமுதாயத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

அகில இந்திய ரயில் ஓட்டுநர்கள் சங்கத்தின் மத்திய அமைப்புச் செயலாளர் கே.பாலச்சந்திரன் கூறியதாவது: ரயில் ஓட்டுநர்கள் வேலை நேரத்தை 8 மணி நேரமாகக் குறைக்க வேண்டும். ஆனால், 12 மணி நேரம் வேலை வாங்கப்படுகிறது. ரயில் ஓட்டுநர் அறையில் கழிப்பறை வசதி இன்னும் ஏற்படுத்தப்படவில்லை.

தற்போது பெண் ஓட்டுநர்கள் பணியில் அமர்த்தப்படுகிறார்கள். கழிப்பறை வசதி இல்லாததால், அவர்களும் அவதிப்படுகின்றனர். இந்த பிரச்சினைக்குத் தீர்வு காண அவர்கள் சில ஆலோசனைகளை முன்வைக்கின்றனர்.

வார ஓய்வு குறைந்தபட்சம் 40 மணி நேரம் கொடுக்க வேண்டும் என்று ரயில்வே நிர்வாகத்துக்கு உயர்மட்ட அதிகாரக் குழு 2013-ல் பரிந்துரை செய்துள்ளது. ஆனால், இதுவரை ரயில்வே நிர்வாகம் அமல்படுத்தவில்லை. ஆண்டில் 365 நாட்கள் வேலை என்பதால், உடல், மனநலம் பாதிக்கப்படுகிறது. இதனால், மருத்துவ தகுதி இழப்பு ஏற்படுகிறது. தனிமனிதனுக்கும், குடும்பத்துக்கும், ரயில்வேக்கும், நாட்டுக்கும் இழப்பு ஏற்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

கருத்தரங்கில், ஏஐடியுசி தேசிய செயலர் சி.குமார், சிஐடியு தேசிய துணைத் தலைவர் ஏ.கே.பத்மநாபன் உட்பட பலர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in