

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் 354 சமுதாயக் கிணறுகளில் 247 நல்ல நிலையில் உள்ளன. இதில் மாயமான மற்றும் தனியார் வசமுள்ள கிணறுகளை மீட்க வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழகம் முழுவதும் வேளாண்மை பொறியியல் துறை சார்பில், 1982-ம் ஆண்டு சிறு, குறு விவசாயிகளை ஒருங்கிணைத்து, சமுதாய கிணறுகள் தோண்டப் பட்டன. அவற்றுக்கு பம்புசெட் மோட்டாரும், இலவச மின் வசதியும் ஏற்படுத்தித் தரப்பட்டன. ஒரு கிணறு மூலம் 20 முதல் 30 ஏக்கர் வரை பாசன வசதி பெற்றன. அவற்றைப் பாதுகாக்க சிறு, குறு விவசாயிகள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டன.
இவற்றின் மூலம் முன்னுரிமை அடிப்படையில் விவசாயத்துக்குத் தண்ணீர் பாய்ச்சி வரப்பட்டது. பல ஆண்டுகளாக விவசாயக் குழுவுக்கான தேர்தலை நடத்தாததால், சிலர் சமுதாயக் கிணறுகளை தங்கள் சொந்தக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டனர். அவற்றை மீட்க வேண்டுமென, சிவகங்கை மாவட்ட விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தினர்.
இதையடுத்து, 10 ஆண்டு களுக்கு முன்பு சமுதாயக் கிணறுகள் குறித்து அந்தந்த ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மூலம் ஆய்வு நடத்தப்பட்டது. இதில், சிவகங்கை மாவட்டத்தில் தோண்டப்பட்ட 354 கிணறுகளில் 247 மட்டுமே நல்ல நிலையில் இருப்பது தெரியவந்தது. அதில், பல கிணறுகள் தனியார் கட்டுப்பாட்டில் உள்ளதும் தெரியவந்தது.
மீதமுள்ள 107 கிணறுகளில் 67 கிணறுகள் தூர்ந்து போய் தண்ணீர் இல்லாமலும், 40 கிணறுகள் இருந்த சுவடே தெரியாமல் மறைந்து இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, விவசாயிகள் குழுக்கள் அமைத்து சமுதாயக் கிணறுகளை மீட்க வேண்டுமென வேளாண்மை, ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகளுக்கு, அப்போதைய மாவட்ட ஆட்சியர் ராஜா ராமன் உத்தரவிட்டார். ஆனால், அதன் பின்னர் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இது குறித்து சிவகங்கை விவசாயிகள் பிரதிநிதி சந்திரன் கூறுகையில், ‘‘விவசாயிகள் குழுக்களை அமைத்து மாயமான, தனியார் கட்டுப்பாட்டில் உள்ள கிணறுகளை மீட்க வேண்டும். அந்த கிணறுகளை பிற விவசாயிகள் பயன்படுத்தும்படி நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்றார்.