Published : 24 Jul 2023 04:00 AM
Last Updated : 24 Jul 2023 04:00 AM

கனிமவளம் கொண்டு செல்லும் வாகனங்களுக்கு கட்டுப்பாடு: குமரியில் ஆக.1 முதல் நடைமுறை

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் வழியாக 10-க்கும் மேற்பட்ட சக்கரம் உள்ள வாகனங்களில் கனிம வளங்களை ஏற்றிச் செல்லக்கூடாது. மேலும், 28 டன் எடைக்கு மேல் கனிம வளங்களை கொண்டு செல்லக்கூடாது. இதை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என,பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.

நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று அவர் கூறியதாவது: கன்னியாகுமரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக் கையை ஏற்று தமிழக முதல்வர் ஸ்டாலின் போக்குவரத்து ஆணை யர் மூலமாக ஒரு செயல்முறை ஆணையை பிறப்பித்துள்ளார். அதன்படி இனி கன்னியாகுமரி மாவட்டம் வழியாக 10-க்கும் மேற்பட்ட சக்கரம் உள்ள வாகனங்களில் கனிம வளங்களை ஏற்றிச் செல்லக்கூடாது.

28 டன் எடைக்கு மேல் கனிம வளங்களை கொண்டு செல்லக் கூடாது. இதை மீறும் வாகனம், வாகன உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கனிம வளங்கள் கொண்டு செல்ல 2 வழித்தடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அந்த வழியாக மட்டுமே கொண்டு செல்ல வேண்டும்.

அதாவது, ஆரல்வாய்மொழியில் இருந்து செண்பகராமன் புதூர், துவரங்காடு வழியாக களியங்காடு வந்து வாகனங்கள் செல்ல வேண்டும். மேலும் காவல்கிணறில் இருந்து தோவாளை, வெள்ளமடம், அப்டா மார்க்கெட், புத்தேரி, இறச்சகுளம் வழியாக களியங்காடு வந்து செல்லலாம். கன்னியாகுமரி மாவட்டத்தில் நான்கு வழிச் சாலைகள் இல்லை.

குறுகிய சாலைகள் தான் உள்ளன. இதன் காரணமாக கனிம வளங்களுடன் வாகனங்கள் செல்லும் போது அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வந்தன. இதைத் தடுக்கவே புதிய உத்தரவுகள் பிறப்பிக்கப் பட்டுள்ளன. ஏற்கெனவே அதிக பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. வாகனங்களும் பறிமுதல் செய்யப்படுகின்றன.

மாவட்டத்தில் முன்னர் 36 குவாரிகள் செயல்பட்டு வந்த நிலையில், தற்போது 7 குவாரிகள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன. திருநெல்வேலி, தூத்துக்குடியில் இருந்து அதிக பாரம் ஏற்றி வரும் வாகனங்களை தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள் ளும். மாவட்ட எல்லைப் பகுதியில் உள்ள சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படும்.

இது தொடர்பாக லாரி உரிமையாளர்கள் மற்றும் குவாரி உரிமையாளர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, வரும் 1-ம் தேதி முதல் இந்த உத்தரவு அமல்படுத்தப்படும். ஏற்கெனவே கனிமவளம் கடத்தலை கண்காணிக்க 7 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பறிமுதல் செய்யப்பட்ட லாரிகள் கோட்டாறு காவல் நிலையம் முன் நிறுத்தப்பட்டுள்ளதால், விபத்து அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது.

எனவே, லாரிகளை நிறுத்த வேறு இடம் பார்க்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஆவின் பால் உற்பத்தியை பெருக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொள் முதலை அதிகரிக்கவும் முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. கறவை மாடுகள் வாங்க கடன் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

ஆவின் நெய்க்கு நல்ல வரவேற்பு உள்ளது. தட்டுப்பாடு ஏற்படுவ தால், உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஏற்கெனவே செயல்பட்டு வரும் பால் கூட்டுறவு நிலையங்களை மேம்படுத்தவும், புதிதாக கூட்டுறவு நிலையங்கள் திறக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வரு கிறது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x