மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர் நினைவு தினம் அனுசரிப்பு

மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர் நினைவு தினம் அனுசரிப்பு
Updated on
1 min read

தென்காசி: திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலையில் உள்ள தனியார் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கேட்டு கடந்த 1999-ம் ஆண்டு ஜூலை மாதம் 23-ம் தேதி திருநெல்வேலி சந்திப்பில் இருந்து ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணி சென்றனர்.

அப்போது, போலீஸாருக்கும், போராட்ட குழுவினருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதில் தாமிரபரணி ஆற்றில் மூழ்கியும், பலத்த காயமடைந்தும் தொழிலாளர்கள் 17 பேர் உயிரிழந்தனர். ஆண்டு தோறும் ஜூலை 23-ம் தேதி பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்தோர் கொக்கிரகுளம் சுலோச்சன முதலியார் மேம் பாலத்தின் கீழ் தாமிரபரணி ஆற்றில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அதன்படி நேற்று ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். காங்கிரஸ் கட்சி சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் எம்.எல்.ஏ-க்கள் செல்வப்பெருந்தகை, ரூபி மனோகரன் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர். பாஜக சார்பில் திருநெல்வேலி வடக்கு மாவட்ட தலைவர் தயாசங்கர் தலைமையில் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ மற்றும் நிர்வாகிகள்,

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்டச் செயலாளர் லெட்சுமணன் தலைமையில் ஏஐடியுசி மாநிலத் தலைவர் காசிவிஸ்வநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தமிழ் மாநில காங்கிரஸ், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், ஆதித் தமிழர் கட்சி உட்பட பல்வேறு கட்சிகள், அமைப்புகளைச் சேர்ந்தோர் தாமிரபரணி ஆற்றில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

டாக்டர் கிருஷ்ணசாமி: திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நினைவஞ்சலி செலுத்தி கூறும்போது, “ஆற்றில் மூழ்கி உயிரிழந்தவர்களுக்கு தாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில் நினைவகம் அமைக்க அரசு நிலம் ஒதுக்க வேண்டும். புதிய தமிழகம் சார்பில் நினைவகம் எழுப்பப்படும்.

தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா இரண்டரை ஏக்கர் தேயிலை தோட்டங்களை பிரித்து கொடுக்க வேண்டும். அவர்களின் மேம்பாட்டுக்கு அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in