

பதவி நீக்கம் செய்யப்பட்ட புதுச்சேரி துணைநிலை ஆளுநர் வீரேந்திர கட்டாரியாவை புதுவையில் இருந்து உடனடியாக வெளியேற வலியுறுத்தி ஆளுநர் மாளிகை அருகே என்ஆர் காங்கிரஸ் கட்சியினர் புதன்கிழமை போராட்டம் நடத்தினர்.
பதவி நீக்கம் செய்யப்பட்ட வீரேந்திர கட்டாரியா 17-ம் தேதி பஞ்சாப் புறப்படுகிறார். இதற்கிடையே, பதவி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், முதல்வர் ரங்கசாமி அரசையும் தலைமைச் செயலரையும் குற்றஞ்சாட்டி வீரேந்திர கட்டாரியா செவ்வாய்க்கிழமை பேட்டியளித்தார். புதுவை அரசு கொள்ளையடிப்பதையே தாரக மந்திரமாக கொண்டுள்ளதாக அவர் சாடினார். இந்த நிலையில் என்ஆர் காங்கிரஸ் கட்சியின் மகளிரணி நிர்வாகி சுமதி தலைமையில் ஏராளமானோர் ஆளுநர் மாளிகையான ராஜ்நிவாஸ் அருகே புதன்கிழமை காலை திரண்டனர். போலீஸார் அவர்களை முன்னேற விடாமல் தடுத்தனர். இதையடுத்து, ஆளுநர் உருவப்படத்தை வைத்து அதன் மீது சாணி மற்றும் முட்டைகளை வீசி என்ஆர் காங்கிரஸார் போராட்டம் நடத்தினர். மேலும், புதுவையில் இருந்து உடனடியாக கட்டாரியா வெளியேற வேண்டும் என கோஷமிட்டனர்.