Published : 20 Nov 2017 08:53 PM
Last Updated : 20 Nov 2017 08:53 PM

பிற மாநிலத்தவர் பங்கேற்கும் வகையில் போட்டித் தேர்வு விதிகள் தற்போது திருத்தப்படவில்லை: டிஎன்பிஎஸ்சி விளக்கம்

 பிற மாநிலத்தவரும் பங்கேற்கும் வகையில் போட்டித் தேர்வு விதிகள் தற்போது  திருத்தப்படவில்லை என்று டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது.

போட்டித்தேர்வுகளுக்கு வெளிமாநிலத்தவர் விண்ணப்பிக்கும் விதிமுறையானது கடந்த 1955-ம் ஆண்டு முதல் அமலில் இருந்து வருகிறது என்றும் டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) செயலாளர் விஜயகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''

குரூப் 4-ல் அடங்கிய பதவிகளுக்கு பிற மாநிலத்தவரும் பங்கேற்கும் வகையில் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளதென்றும், பணியில் சேர்ந்த இரண்டாண்டுகளில் தமிழ் மொழித் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும் என்றும், விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது தவறானது என்றும், தமிழ் நாட்டைச் சார்ந்தவர்களுக்கே அரசுப் பணிகளில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் நாளிதழ்கள் மற்றும் செய்தி ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன.

இத்தகவல் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது மட்டுமின்றி தவறானதுமாகும். வெளிமாநிலத்தவர் விண்ணப்பிக்கும் விதியானது, தமிழ்நாடு மாநில மற்றும் சார்நிலைப் பணிகளுக்கான சிறப்பு விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு 1955-ம் ஆண்டிலிருந்து அமலில் உள்ளது. தற்போது இவ்விதி தமிழ்நாடு அரசுப் பணியாளர்களுக்கான (பணி நிபந்தனைகள்) சட்டம் 2016-ன் பிரிவு 20(7) மற்றும் 21(1)ல் இடம்பெற்று எவ்வித மாற்றமும் இல்லாமல், தேர்வாணையத்தால் நேரடி நியமனத்திற்கான அனைத்துப் பதவிகளுக்கும் பின்பற்றப்பட்டு வருகிறது.

வெளிமாநில விண்ணப்பதாரர்கள் அனைவரும் பொதுப்பிரிவினராகவே கருதப்படுவதால் தமிழக மாநிலத்தில் உள்ளோருக்கான இட ஒதுக்கீட்டில் எந்தவித பாதிப்பும் மாற்றமும் இல்லை. இவ்விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றையே தேர்வாணையம் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தொகுதி 4-ல் அடங்கியுள்ள பதவிகளுக்கான 14.11.2017 நாளிட்ட அறிவிக்கையிலும் கடைபிடித்து வெளியிடப்பட்டுள்ளது. தற்போது புதிதாக ஏதும் தேர்வாணையத்தால் சேர்க்கப்படவில்லை. பிறமாநிலங்களிலும் இவ்விதிமுறையே பின்பற்றப்பட்டு வருகிறது.

கடந்த மூன்றாண்டுகளில் 66 போட்டித் தேர்வுகள் தேர்வாணையத்தால் நடத்தப்பட்டு 30,098 விண்ணப்பதாரர்கள் தெரிவு செய்யப்பட்டு பணிநியமனம் பெற்றுள்ளார்கள். இவற்றுள் 11 நபர்கள் மட்டுமே பிறமாநிலத்தைச் சார்ந்தவர்கள்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x