

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனத்திற்கு 'காணிக்கை வரவு' என்ற பெயரில் ஒரு பக்தருக்கு ரூ.500 வசூலிக்கும் கோயில் நிர்வாகத்துக்கு பக்தர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
நினைக்க முக்தி தரும் திருத்தலம், பஞ்சபூத திருத்தலங்களில் அக்னி திருத்தலம் என அழைக்கப்படுகிறது திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயில். இக்கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் அதிகளவில் வருகை தருகின்றனர். மேலும் வெளிநாட்டு பக்தர்களும் வருகை புரிந்து சுவாமியை தரிசிக்கின்றனர். பொது தரிசனம் மற்றும் ரூ.50 கட்டண தரிசனம் என்ற அடிப்படையில் சுவாமியை தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், அண்ணாமலையார் கோயிலில் பவுர்ணமி நாளில் ரூ.50 கட்டண தரிசன முறை ரத்து செய்யப்படுகிறது என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கடந்த மாதம் அறிவித்தார். அவரது உத்தரவை மீறி, ஆனி மாத பவுர்ணமி நாளான கடந்த ஜுலை 1-ம் தேதி மாலை வரை பக்தர்களிடம் கட்டண தரிசனத்துக்காக ரூ.50 வசூலிக்கப்பட்டது. இதற்கு, பக்தர்கள் கண்டனம் தெரிவித்ததும், கட்டணம் வசூலிப்பதை கோயில் நிர்வாகம் நிறுத்திக் கொண்டது. மாலை 5 மணிக்குப் பிறகு கட்டணம் வசூலிக்காமல், சுவாமியை தரிசிக்க பக்தர்களை கோயில் நிர்வாகம் அனுமதித்தது.
வருவாய் இழப்பை ஈடு செய்ய: சிறப்பு தரிசன கட்டணம் (ரூ.50) ரத்து செய்யப்பட்டதால், ஆண்டுக்கு கிடைத்து வந்த ரூ.1.32 கோடி வருவாயை இழக்க வேண்டிய நிலை, அண்ணாமலையார் கோயிலுக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வருவாய் இழப்பை, எந்த வடிவில் ஈடு செய்யலாம் என இந்து சமய அறநிலையத் துறை மற்றும் கோயில் நிர்வாகத்தில் உள்ள அதிகாரிகள் தீவிர ஆலோசனை நடத்தி வந்தனர். இதில், 'காணிக்கை வரவு' என்ற பெயரில் ஒரு நபருக்கு ரூ.500 வசூலிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. கோயில் வருவாயை மட்டுமே கருத்தில் கொண்டு, தன்னிச்சையாக அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர். அதன்படி, காணிக்கை வரவு கட்டண வசூல் கடந்த ஓரிரு நாட்களாக முழுவீச்சில் நடைபெற்றுள்ளது.
குறிவைக்கப்பட்ட தெலுங்கு பக்தர்கள்: காணிக்கை வரவு திட்டத்தில் ஒரு நபருக்கு ரூ.500 செலுத்தியவர்களை விஐபிக்கள் பாதையில் அழைத்து சென்று, சுவாமியை எளிதாக தரிசனம் செய்ய கோயில் ஊழியர்கள் உதவி புரிந்துள்ளனர். ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களை குறிவைத்து, அவர்களிடம் திட்டத்தின் நோக்கத்தை, அவர்களது மொழியிலேயே எடுத்துரைத்து கோயில் நிர்வாகம் வசூல் வேட்டையை நடத்தி வந்துள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த செல்வந்தர்களும் காணிக்கை வரவு திட்டத்தில் பணத்தை செலுத்தி, சுவாமியை விரைவாக தரிசனம் செய்துள்ளனர். இதற்கு இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்புகள் மற்றும் பக்தர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், அண்ணாமலையார் கோயிலில் கட்டண கொள்ளை என்ற செய்தி சமூக வலைதளங்களில் நேற்று வைரலானது.
நினைவு கூறும் கருணாநிதியின் வசனம்: இது குறித்து பக்தர்கள் கூறும்போது, ''நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடித்த பராசக்தி திரைப்படத்தில், கோயில் வேண்டாம் என கூறவில்லை, கோயில்கள் கொள்ளையர்களின் கூடாரமாகிவிடக்கூடாது என முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி வசனம் எழுதியிருப்பார். அவரது தொலைநோக்கு சிந்தனையை, இப்போதும் நினைவு கூறலாம். இறைவனை தரிசனம் செய்ய வரும் பக்தர்களிடம் காணிக்கை பெறுவது என்ற நிலையில் மாற்றம் ஏற்பட்டு, காணிக்கையை பறிப்பது என்ற நிலையை கோயில் நிர்வாகம் ஏற்படுத்தி உள்ளது. இது பகல் கொள்ளையாகும். இறைவன் முன்பு அனைவரும் சமம் என்ற நிலையை உணர்த்த வேண்டுமென்றால், கோயில்களில் அனைத்து வகையான கட்டண தரிசனத்தையும் தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும்'' என்றனர். இது குறித்து அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் தரப்பில் கேட்டபோது, ''வருவாய் இழப்பை ஈடு செய்ய, காணிக்கை என்ற பெயரில் ரூ.500 வசூலிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு கிளம்பியதால், காணிக்கை வரவு வசூலிப்பது நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது'' என்றனர்.