

சென்னை: சென்னை தீவுத் திடலில் பார்முலா 4 கார் பந்தய மைதானம் அமைக்க சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் திட்டமிட்டுள்ளது.
சென்னைத் தீவுத்திடலில் 30 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.50 கோடி மதிப்பீட்டில் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் சார்பில் இயற்கை வனப்புடன் கூடிய நகர்ப்புற பொதுச் சதுக்கம் அமைக்கப்படும் என்று பேரவையில் அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார். இந்நிலையில், இந்த திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக முதல் கட்ட ஆய்வை அமைச்சர் சேகர் பாபு மேற்கொண்டனர். இந்த திட்டத்தில், தீவுத் திடலில் பார்முலா 4 கார் பந்தய மைதானம் அமைக்க சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், ”சென்னைத் தீவுத்திடலில் 30 ஏக்கர் நிலப்பரப்பில் இயற்கை வனப்புடன் நகர்ப்புர பொதுச் சதுக்கம் அமைய உள்ளது.
இதில், கண்காட்சி அரங்குகள், திறந்தவெளி திரையரங்கம், பல் அடுக்கு வாகன நிறுத்தம், திறந்த வெளி வாகன நிறுத்தம் இடங்கள், பூங்கா, உணவகங்கள் போன்றவை அமைய உள்ளன. குறிப்பாக, பார்முலா 4 கார் பந்தய மைதானம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பரிந்துரையின் படி பார்முலா 4 கார் பந்தய மைதானம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கூவம் ஆற்றின் ஒரு பக்கம் 18 ஏக்கர் நிலப்பரப்பையும், மற்றொரு பக்கம் 12 ஏக்கர் நிலப்பரப்பையும் கொண்டது தீவுத்திடல். இதனைக் கருத்தில் கொண்டு இந்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. தற்போது திட்ட வடிவமைப்பு தயார் செய்யப்பட்டுள்ளது. இதற்கு இறுதி வடிவம் கொடுத்தபிறகு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்படும். அதன் பின்னர் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு பணிகள் தொடங்கும்" என தெரிவித்தனர்.