Published : 23 Jul 2023 05:04 PM
Last Updated : 23 Jul 2023 05:04 PM

சுப்பிரமணிய சிவா நினைவு நாள் | நினைவிடத்தில் வேளாண் துறை அமைச்சர் மலர் தூவி மரியாதை

தருமபுரி: தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் அமைந்துள்ள சுதந்திரப் போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா நினைவிடத்தில் அவரது நினைவு நாளை ஒட்டி வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியைச் சேர்ந்த முதுபெரும் சுதந்திரப் போராட்டத் தியாகியான சுப்பிரமணிய சிவா, சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டதன் காரணமாக சிறையில் அடைக்கப்பட்டார். இதன்காரணமாக அவரது உடல் நலன் பாதிக்கப்பட்டது. சிறையில் இருந்து வெளியே வந்த அவர், தருமபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பாரப்பட்டி பகுதியில் நண்பர் சின்னமுத்து முதலியார் என்பவரின் துணையுடன் தங்கி இருந்து, சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்து வந்தார். அப்போது, அனைத்து தரப்பினரும் வழிபடும் வகையில் பாரதமாதா கோயில் அமைக்க வேண்டும் என விரும்பி அதே பகுதியில் 6 ஏக்கர் நிலத்தை நண்பர் மூலம் அவர் பெற்றார்.

எனினும், உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு கடந்த 1925-ம் ஆண்டு ஜூலை 23-ம் தேதி மறைந்தார். அதைத்தொடர்ந்து, பாரதமாதா கோவில் அமைக்க அவர் பெற்றிருந்த 6 ஏக்கர் நிலத்தின் ஒரு பகுதியில் சுப்பிரமணிய சிவாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. தமிழக அரசால் சுப்பிரமணிய சிவாவின் நினைவிடமாக பராமரிக்கப்பட்டு வந்த அந்த பகுதியில் பின்னாளில் அரசு சார்பில் மணிமண்டபம் அமைக்கப்பட்டது. அதேபோல, சுப்பிரமணிய சிவாவின் விருப்பப்படி இதே வளாகத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பாரதமாதா ஆலயமும் ஏற்படுத்தப்பட்டது.

இந்த மணிமண்டப வளாகத்தில் ஆண்டுதோறும் சுப்பிரமணிய சிவாவின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாட்களில் அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் 98-வது நினைவு தினமான இன்று (ஜூலை 23) அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சிக்காக தயார் செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கலந்து கொண்டு சிவாவின் நினைவிடத்தில் மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவரைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் சாந்தி, எம்எல்ஏ-க்கள் ஜி.கே.மணி, வெங்கடேஷ்வரன், முன்னாள் அமைச்சர் பழனியப்பன், முன்னாள் எம்எல்ஏ தடங்கம் சுப்பிரமணி உள்ளிட்ட பலரும் சுப்பிரமணிய சிவா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x