தஞ்சை மாவட்டத்தில் 9 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் 9 இடங்களில் தேசிய புலனாவு முகமை (NIA) அதிகாரிகள் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்த பாமக பிரமுகர் ராமலிங்கம் கடந்த 2019ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக National Investigation Agency அதிகாரிகள் ஏற்கெனவே 13 பேரை கைது செய்துள்ளனர். இந்த கொலை தொடர்பாக ஐந்து பேரை தேடி வரும் அதிகாரிகள், இன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர், கும்பகோணம், திருபுவனம், பாபநாசம், ராஜகிரி, திருமங்கலக்குடி, அதிராம்பட்டினம் உள்ளிட்ட 9 இடங்களில் காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தஞ்சாவூர் நடராஜபுரம் தெற்கு காலனியில் உள்ள எஸ்டிபிஐ கட்சி ஊடகப்பிரிவு செயலாளர் பக்ரூதீன், கும்பகோணம் மேலக்காவேரியை சேர்ந்த அப்துல் மஜீத், ராஜகிரி பகுதியைச் சேர்ந்த முகமது பாரூக், வடக்கு மாங்குடியைச் சேர்ந்த புருகானுதீன், திருபுவனம் பகுதியை சேர்ந்த முகமது அலி ஜின்னா ஆகியோர் வீடுகளில் காலை 6 மணி முதல் சோதனை நடைபெற்று வருகிறது.
