

அடுக்குமாடிக் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கித் தவித்த காகம் ஒன்று 4 நாட்களுக்குப் பிறகு புதன்கிழமை உயிருடன் தப்பி வெளியே வந்தது. பறக்க முடியாமல் தவித்த அந்த காகத்திற்கு மீட்புக் குழுவினர் உதவி செய்தனர்.
போரூரை அடுத்த மவுலி வாக்கத்தில் 11 மாடி கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி 5-வது நாளாக புதன்கிழமையும் நடைபெற்றது. கட்டிட இடிபாடுகளுக்கு இடையில் சிக்கியிருந்த காகம் ஒன்று மீட்புப் பணியின்போது, பகல் 12 மணி அளவில் உயிருடன் வெளியே வந்தது. காகத்தின் மேலே பெவிகால் போன்ற பசைகள் கொட்டி இருந்ததால், காகத்தின் சிறகுகள் அனைத்தும் ஒன்றோடு ஒன்றாக ஒட்டிக் கொண்டு இருந்தன. எனவே காகத்தால் பறக்க முடியவில்லை. கட்டிட இடிபாடுகளில் இருந்து வெளியே வந்த காகம் தன் மீது ஒட்டியிருந்த பசையை அலகால் மிகவும் சிரமப்பட்டு அகற்றிக் கொண்டிருந்தது. இதனைப் பார்த்த பேரிடர் மீட்புக் குழுவை சேர்ந்த இருவர் காகத்தை பிடித்தனர். பயந்துபோன காகம் அவர்களின் கைகளை கொத்தியது.
அதனை பொருட்படுத்தாத மீட்பு குழுவினர், காகத்தின் மேலே இருந்த பசையை கொஞ்சம் கொஞ்சமாக அகற்றி, தங்கள் மடியில் வைத்து காகத்திற்கு தண்ணீர் கொடுத்தனர். தண்ணீரை குடித்த காகம், அங்கேயே படுத்துக் கொண்டது. பின்னர் புளூ கிராஸில் காகத்தை ஒப்படைத்தனர்.
காகத்திற்கும் மீட்புக் குழுவினர் உதவியது அங்கிருந்த அனைவருடைய மனதையும் நெகிழச் செய்தது.