

கோவை: ஜி-20 உச்சி மாநாட்டின் அறிவியல் பிரிவு மாநாடு ‘எஸ் 20’ என்ற தலைப்பில் கோவை ஈஷா யோகா மைய வளாகத்தில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றது.
இந்த மாநாடு நிறைவடைந்ததையடுத்து, ஈஷா வளாகத்தில் நேற்று செய்தியாளர்களிடம் ‘எஸ் 20’ பிரிவு துணைத் தலைவர் பேராசிரியர் அசுதோஷ் ஷர்மா, ஜி-20 மாநாடு இணைச் செயலர் நாகராஜ் கக்கனூர் நாயுடு உள்ளிட்டோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: `ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்' என்ற தலைப்பில் நடத்தப்பட்ட இந்த சர்வதேச மாநாடு நிகழ்ச்சியில், 20 நாடுகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட வல்லுநர்கள் பங்கேற்றனர்.
உலக அளவில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பேரழிவுகள், அவற்றை எதிர்கொள்ளவும், தவிர்க்கவும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. எதிர்வரும் காலங்களில் கரோனா போன்ற பெருந்தொற்று பரவாமல் தடுத்தல், எதிர்கொள்ளுதல் உள்ளிட்டவை குறித்து வல்லுநர்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.
சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத சூரியஒளி, காற்றாலை உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தித் துறைக்கு சர்வதேச அளவில் அதிக முக்கியத்துவம் அளித்து செயல்பட வேண்டுமென இந்த மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
குறிப்பாக, சூரியஒளி ஆற்றல் உற்பத்தித் துறையில், பகலில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை சேமித்துவைக்க போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் உடனுக்குடன் பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. எனவே, மின்சேமிப்பு கட்டமைப்பை வலுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
வரும் காலங்களில் மக்களின் அன்றாட வாழ்வின் அனைத்து செயல்களிலும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மிக முக்கியப் பங்கு வகிக்க உள்ளது. இத்தகைய அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதால் நன்மைகள் கிடைப்பதைப்போல, பல தீமைகளும் ஏற்படும். எனவே, இத்தகைய தொழில்நுட்பத்தை நல்ல முறையில் பயன்படுத்தி, மக்கள்நலன் காக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது.
இதையொட்டி, ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குருவுடன் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி,பங்கேற்பாளர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. ஆன்மிகம், அறிவியல் இரண்டும் மக்கள் நலனைத்தான் அடிப்படையாகக் கொண்டவை. பூமியை வாழச் சிறந்த இடமாக மாற்ற, அனைவரும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. இந்த நடவடிக்கைகளுக்கு மக்களின் பங்களிப்பு மிக முக்கியம் என்றும் வலியுறுத்தப்பட்டது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
ஜி-20 செயலர் நமன் உபாத்யாய், இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை மூத்த இயக்குநர் ஆர்.கே.ஷர்மா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.