

சென்னை: முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்டசமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்கான மாத ஓய்வூதியத் தொகையை ரூ.1,000-ல் இருந்து, ரூ.1,200-ஆக உயர்த்தி வழங்குவது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது, உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத் துறை சோதனை, விசாரணை என்ற பரபரப்பான சூழ்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் நேற்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
இதில், அமைச்சர்கள், தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா மற்றும் துறைச் செயலர்கள், உயரதிகாரிகள் பங்கேற்றனர். கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை செயல்படுத்துவது, முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூகப் பாதுகாப்பு திட்ட மாதாந்திர ஓய்வூதியத் தொகையை உயர்த்துவது உள்ளிட்டவை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
பின்னர், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகம் பல்வேறு சமூகப் பாதுகாப்பு திட்டங்கள் மூலமாக ஏழைகளுக்கு தொடர்ந்து உதவிகளை வழங்கி வருகிறது. சமூகப் பாதுகாப்புத் திட்டம் மூலமாக வழங்கப்படும் முதியோர் உதவித் தொகை உள்ளிட்ட ஓய்வூதியங்கள் ரூ.1,000-ல் இருந்து, ரூ.1,200-ஆக உயர்த்தி வழங்க அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்திரா காந்தி தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், மாற்றுத் திறனாளிகள், கைம்பெண்கள், ஆதரவற்றோர், கணவரால் கைவிடப்பட்டோர், 50 வயதுக்கு மிகாமல் திருமணமாகாத ஏழைப் பெண்கள் மற்றும் இலங்கையில் இருந்து வந்தவர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் என பல்வேறு திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன.
1962-ல் சமூகப் பாதுகாப்புத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டபோது, மாதம் ரூ.20 வழங்கப்பட்டது. இது படிப்படியாக உயர்த்தப்பட்டு, தற்போது மாதம் ரூ.1,000 வழங்கப்படுகிறது. இதில், மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியம் கடந்த ஜனவரி 1-ம்தேதி முதல் 1,500-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இவை தவிர, முதியோர் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.
ரூ.845.91 கோடி கூடுதல் செலவு: அனைத்து சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் மூலமாக 30 லட்சத்து 55,857 பயனாளிகள் மாதாந்திர ஓய்வூதியம் பெற்று வருகிறார். இவர்களுக்கு உதவும் வகையில், ஓய்வூதியத்தை ரூ.1,000-ல் இருந்து ரூ.1,200-ஆக உயர்த்தி வழங்க அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.845.91 கோடி கூடுதல்செலவு ஏற்படும். மேலும், ஓய்வூதியம் கோரி விண்ணப்பித்துள்ளோர் 74 லட்சம் பேர் உள்ளனர். அவர்களில் தகுதியானவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கவும், அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப் பட்டுள்ளது.
கைத்தறி, தொழிலாளர் நலத்துறையின் கீழ் உள்ள 18 அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரிய உறுப்பினர்கள், கட்டிடத் தொழிலாளர் வாரிய உறுப்பினர்களும், உயர்த்தப்பட்ட ஓய்வூதியத்தால் பயனடைவர். புதிய ஓய்வூதியம் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து வழங்கப்படும்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு மொத்தம் 3 கட்டங்களாக 35,925 முகாம்கள் ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற உள்ளன. இந்த திட்டத்தில் தகுதிவாய்ந்தஒரு பயனாளிகூட விடுபட்டு விடக்கூடாது என்பதில் முதல்வர் உறுதி யாக உள்ளார்.
மணிப்பூர் சம்பவம் உலக அளவில் கவனம் பெற்றுள்ளது. தமிழக முதல்வரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக எம்.பி.க்கள்நாடாளுமன்றத்தில் தொடர்ந்து கண்டனக் குரல் எழுப்பி வருகின்றனர். மணிப்பூர் சம்பவத்தில் அதிமுக இரட்டை வேடம் போடுகிறது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார். நிதித் துறைச் செயலர் த.உதயசந்திரன் உடனிருந்தார்.
12 ஆண்டுகளுக்கு பிறகு...: தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தனது ட்விட்டர் பதிவில்,‘‘12 ஆண்டுகளுக்குப் பிறகு முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்கான ஓய்வூதியத் தொகை ரூ.1,000-ல்இருந்து, ரூ.1,200-ஆக உயர்த்தி வழங்கப்படுகிறது’’ என்று தெரிவித் துள்ளார்.