

சென்னை: சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கினால்திமுக ஆட்சி கவிழும் என்று முன்னாள்அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.
மதுரையில் நடக்கவுள்ள அதிமுக பொன்விழா மாநாடு தீர்மானக் குழு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது: சிறையில் செந்தில் பாலாஜி தங்குவதற்கு விதிகளை மீறி, வசந்த மாளிகை போல உருவாக்கிக் கொடுத்துள்ளனர். உடல் நிலை சரியில்லை என்பதற்காக 12 பேரை அமைச்சரவையில் இருந்து எம்.ஜி.ஆர் விடுவித்தார்.
அமைச்சர்கள் யாரேனும் தவறு செய்தால், உடனடியாக அமைச்சர் பதவியில் இருந்து ஜெயலலிதா விடுவித்திருக்கிறார். இந்த தைரியம் முதல்வர் ஸ்டாலினுக்கு இல்லை. செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கினால் ஆட்சியே கவிழ்ந்து விடும். எல்லா விஷயங்களும் தெரிந்த செந்தில் பாலாஜி, ஒரு ஏக்நாத் ஷிண்டேவாகவும் மாறலாம்.
அந்த அச்சம் காரணமாகத் தான் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து முதல்வர் ஸ்டாலின் விடுவிக்காமல் இருக்கிறார். அமைச்சர் பொன் முடி விவகாரத்தில் அமலாக்கத் துறை பறிமுதல் செய்தது 1 சதவீதம் மட்டுமே. இன்னும் 99 சதவீதம் பறிமுதல் செய்ய வேண்டி உள்ளது என்றார்.