Published : 13 Nov 2017 09:53 PM
Last Updated : 13 Nov 2017 09:53 PM

பருவமழையின் தொடக்க காலத்தில் 88 சதவீதம் மழை கிடைத்துள்ளது: அமைச்சர் உதயகுமார்

வழக்கமாக வடகிழக்கு பருவமழையின் தொடக்க காலத்தில் அதிக மழைப் பொழிவு கிடைக்காது. ஆனால், இந்த பருவமழையின் தொடக்க காலத்தில் 88 சதவீதம் மழை கிடைத்துள்ளது என்று அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார்.

தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் மழை நிவாரணப்பணிகள் குறித்து திருவள்ளூரில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மட்டும் மழைப் பொழிவு உள்ளது. குறிப்பாக, சென்னை,காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் அதிகமழைப் பொழிவு உள்ளது. 18 மாவட்டங்களில் மழைப் பொழிவு இல்லை. வழக்கமாக வடகிழக்கு பருவமழையின் தொடக்க காலத்தில் அதிக மழைப் பொழிவு கிடைக்காது. ஆனால், இந்த பருவமழையின் தொடக்க காலத்தில் 88 சதவீதம் மழை கிடைத்துள்ளது. குறிப்பாக நாகையில் 82 சதவீதம், சென்னையில் 85, திருவள்ளூரில் 86, காஞ்சிபுரத்தில் 82, கடலூரில் 71, விழுப்புரத்தில் 69 சதவீதம் மழை கிடைத்துள்ளது.

நீராதாரங்கள் அனைத்தும் பாதுகாப்பாக உள்ளன. தற்போது வரை, பூண்டி நீர்த்தேக்கம் 28 சதவீதமும், சோழவரம் 65, புழல் 41, செம்பரம்பாக்கம் 65, வீராணம் 61 சதவீதமும் நிரம்பியுள்ளது. நிவாரண முகாம்களை பொறுத்தவரை நாகை மாவட்டத்தில் மட்டும் 18 முகாம்களில் 14 ஆயிரத்து 899 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பருவமழைக்கு இதுவரை 32 மாவட்டங்களிலும் 14 பேர் இறந்துள்ளனர். இவர்கள் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ளது. மழை நீர் வடிந்ததும் உடனுக்குடன், பயிர் சேதம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்'' என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x