திருத்துறைப்பூண்டி அருகே பரப்பாகரம் கிராமத்தில் நேரடி தெளிப்பு மூலம் குறுவை சாகுபடி செய்த வயலில் முளைத்த நெற்பயிர்களை டிராக்டர் மூலம் உழவு செய்து அழித்த விவசாயி.
திருத்துறைப்பூண்டி அருகே பரப்பாகரம் கிராமத்தில் நேரடி தெளிப்பு மூலம் குறுவை சாகுபடி செய்த வயலில் முளைத்த நெற்பயிர்களை டிராக்டர் மூலம் உழவு செய்து அழித்த விவசாயி.

திருத்துறைப்பூண்டி அருகே தண்ணீரின்றி கருகிய நெற்பயிர்களை டிராக்டரில் உழுது அழித்த விவசாயி

Published on

திருவாரூர்: திருத்துறைப்பூண்டி அருகே தண்ணீரின்றி கருகி வரும் நேரடி தெளிப்பு நெற்பயிர்களைக் கண்டு விரக்தியடைந்த விவசாயி ஒருவர், அவற்றை டிராக்டரைக் கொண்டு உழுது அழித்தார்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஒன்றியம் மணலி ஊராட்சி பரப்பாகரம் கிராமத்தில் சுமார் 250 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நேரடி தெளிப்பு மூலம் குறுவை சாகுபடியை மேற்கொண்டுள்ளனர். இந்தப் பகுதிக்கு அரிச்சந்திரா ஆற்றில் இருந்து பிரியும் ராசன் வாய்க்கால் மூலம் தான் பாசனம் நடைபெறும்.

ஆனால், நிகழாண்டு ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்ட பின்னர் அரிச்சந்திரா ஆற்றில் ஒரு முறைதான் தண்ணீர் வந்தது. தொடர்ச்சியாக தண்ணீர் வராத நிலையில், இந்தப் பகுதியில் நேரடி தெளிப்பு மூலம் பயிரிடப்பட்ட குறுவை நெற்பயிர்கள் தண்ணீர் இன்றி கருகத் தொடங்கின. இதனால், இப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

இந்நிலையில், இந்த கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செல்வம் என்பவர், தனக்குச் சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் நேரடி தெளிப்பு மூலம் மேற்கொண்டிருந்த குறுவை பயிர் காய்ந்து கருகுவதை பார்த்து விரக்தியடைந்தார். இதையடுத்து, அவர் நேற்று முன்தினம் டிராக்டர் மூலம் உழுது நெற்பயிர்களை அழித்தார்.

இது குறித்து அவர் கூறும்போது, “மேட்டூர் அணை ஜூன் 12-ம் தேதியே திறக்கப்பட்டதால், தண்ணீர் வரும் என்ற நம்பிக்கையில் 2 ஏக்கரில் நேரடி தெளிப்பு மூலம் குறுவை சாகுபடி செய்திருந்தேன். இதற்காக விதை நெல், டிராக்டர் உழவு, விதைத் தெளிப்பு என என ரூ.10 ஆயிரம் வரை செலவு செய்துள்ளேன்.

ஆனால், தண்ணீர் வராததால் பயிர்கள் கருகத் தொடங்கிவிட்டன. தற்போது கர்நாடக அரசும் தண்ணீர் திறக்கும் என்ற நம்பிக்கை இல்லாதால், வேறு வழியின்றி டிராக்டரை விட்டு நெற்பயிர்களை அழித்துவிட்டேன். இதேபோல இப்பகுதி விவசாயிகள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளதால் அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்” என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in