'தவறிழைத்தவர்கள் விரைவில் தண்டனை பெறுவர்' - அமலாக்கத் துறை ரெய்டு குறித்து செல்லூர் ராஜு கருத்து

மதுரை முனிச்சாலையில் ஆக.20 அதிமுக மாநாடு குறித்து மகளிரணி சார்பில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசினார். படம்: நா.தங்கரத்தினம்.
மதுரை முனிச்சாலையில் ஆக.20 அதிமுக மாநாடு குறித்து மகளிரணி சார்பில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசினார். படம்: நா.தங்கரத்தினம்.
Updated on
1 min read

மதுரை: உப்பு தின்றவன் தண்ணீர் குடிச்சாக வேண்டும்; தப்பு செய்தவன் தண்டனை பெற்றாக வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தார்.

ஆக.20-ல் மதுரையில் நடைபெறும் அதிமுக மாநாடு குறித்து ஆலோசனைக் கூட்டம் மகளிரணி சார்பில் நேற்று (ஜூலை 22) மதுரை முனிச்சாலையிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமை வகித்தார். இதில், முன்னாள் அமைச்சர் வளர்மதி, தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல செயலாளர் ராஜ்சத்யன் ஆகியோர் பங்கேற்று ஆலோசனைகள் வழங்கினர். அதனைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, இருசக்கர வாகனம், ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்களில் மாநாடு அறிவிப்பு ஸ்டிக்கர் ஒட்டி தொடங்கி வைத்தார்.

பின்னர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களிடம் கூறியதாவது: மதுரையில் எந்த பணியைத் தொடங்கினாலும் வெற்றிதான். சினிமா, அரசியல் என எதுவாக இருந்தாலும் வெற்றிகரமாக அமையும். அதேபோல், எல்லோரும் விரும்பும் மதுரையில் அதிமுக மாநாடு ஆக.20ல் முத்திரை பதிக்கவுள்ளது. இந்த மாநாடு தொண்டர்கள் நடத்தும் மாநாடு, குடும்பம் குடும்பமாக வர உள்ளனர்.

மற்றவர்கள் கூட்டுவது கூட்டம், அது மாநாடு கிடையாது. இனி தமிழகத்தை ஆளப்போகும் கட்சி அதிமுக தான். எம்ஜிஆர், ஜெயலலிதா சொன்னதைப்போல் வரும் தேர்தலோடு திமுகவுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். திமுக கருணாநிதியின் குடும்ப கட்சி. அதற்கு எதிர்காலமே இல்லை என்னும் வரலாற்றை பதிக்கும் மாநாடாக இந்த மாநாடு அமையும்.

அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்க ஒரு அளவுகோல் வைத்திருப்பர். அதை மீறும்போதுதான் நடவடிக்கை எடுப்பர். உப்பு தின்றவன் தண்ணீர் குடிச்சாக வேண்டும், தப்பு செய்தவன் தண்டனை பெற்றாக வேண்டும். இதுதான் மக்களுடைய கருத்து, தவறிழைத்தவர்கள் விரைவில் தண்டனை பெறுவர். இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in