

மேட்டூர்: மேட்டூர் அணை நீர்மட்டம் கடந்த 2 ஆண்டுக்கு பிறகு 70 அடிக்கு கீழ் சரிந்த நிலையில், நீரில் மூழ்கியிருந்த நந்தி சிலை வெளியே தெரிந்தது.
மேட்டூர் அணை நீர்தேக்கம் 60 மைல் பரப்பளவை கொண்டுள்ளது. மேட்டூர் அணை கட்டப்பட்ட போது, காவிரி கரையில் இருந்த மக்கள் மேடான பகுதிக்கு குடியமர்த்தப்பட்டனர். அப்போது, விளை நிலங்கள், பெரிய நந்தி சிலையுடன் கூடிய ஜலகண்டேசுவரர் கோயில், பழமை வாய்ந்த கிறிஸ்துவ ஆலயம் மக்கள் இடிக்காமல் அப்படியே விட்டு சென்றனர். அணையின் நீர்மட்டம் குறையும் போது, காவிரி கரையோர பகுதியில் மக்கள் விவசாயம் செய்து வருகின்றனர். அப்போது, நந்தி சிலை, கிறிஸ்துவ ஆலய கோபுரம் வெளியே தெரியும்.
இந்நிலையில், மேட்டூர் அணையில் இருந்து கடந்த மாதம் 12ம் தேதியில் இருந்து டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைக்கு நேற்று காலை விநாடிக்கு 154 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை விநாடிக்கு 107 கனஅடியாக குறைந்தது. நீர்வரத்தை காட்டிலும் தண்ணீர் திறப்பு அதிகளவில் உள்ளதால் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. தற்போது, அணையின் நீர்மட்டம் 69.96 அடியாகவும் நீர்இருப்பு 32.66 டி.எம்.சி.யாகவும் உள்ளது.
அதன்படி, கடந்த 12-ந்தேதி அணையின் நீர்மட்டம் 78 அடியாக குறைந்தபோது கிறிஸ்தவ ஆலய கோபுரம் தண்ணீர் மட்டத்திற்கு மேலே தெரிய தொடங்கியது. இந்நிலையில் அணையின் நீர்மட்டம் கடந்த 2 ஆண்டுக்கு பிறகு இன்று 70 அடிக்கும் கீழ் குறைந்ததால் ஜலகண்டேஸ்வரர் கோவில் நந்தி சிலை தண்ணீர் மட்டத்திற்கு மேலே தெரிய தொடங்கி உள்ளது. இதனை காண வார விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் படையடுத்து வருகின்றனர்.