Published : 22 Jul 2023 09:04 PM
Last Updated : 22 Jul 2023 09:04 PM
சென்னை: "சிலர் தமிழுக்கும், தமிழர்களுக்கும் விரோதமான செயல்களை செய்து கொண்டே தமிழ் முகமூடியை போட்டுக் கொண்டு தமிழகத்தில் உள்ளவர்களை எல்லாம் ஏமாற்றிவிடலாம் என்று கணக்கு போடுகிறார்கள். ஆனால் அவர்கள் போடுவது எல்லாம் தப்பு கணக்குதான்" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள திருவாவடுதுறை டி.என். ராஜரத்தினம் கலையரங்கில் முத்தமிழ்ப் பேரவையின் 42-ஆம் ஆண்டு இசைவிழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டு முதல்வர் ஸ்டாலின் பேசியது: "மறைந்த முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா ஆண்டு இது என்பதால் இந்த ஆண்டு முதல் அவரது பெயரால் ஒரு விருதை முத்தமிழ்ப் பேரவை சார்பில் வழங்க வேண்டும் என்று உரிமையுடன் நான் கேட்டுக் கொள்கிறேன்.
முத்தமிழுக்குச் சிறப்புற தொண்டாற்றுபவர்க்கு, அவரது பெயரிலான விருதும் தனியாக வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். பொதுவாக முதல்வர் கலந்து கொள்ளும் விழாவில் முதல்வரிடம்தான் கோரிக்கை வைப்பார்கள். ஆனால் முத்தமிழ்ப் பேரவைச் செயலாளர் இயக்குநர் அமிர்தம் மீதான உரிமையின் காரணமாக நான் கோரிக்கை வைக்கிறேன். அதனை அவர் தட்டாமல் ஏற்றுக் கொள்வார் என்று நான் நம்புகிறேன்.
மறைந்த முதல்வர் கருணாநிதி எழுதாத எழுத்துகள் இல்லை. பாடல்களை - கவிதைகளை எழுதிக் குவித்தவர் அவர். நாடகங்களை எழுதினார்; நடித்தார். பாடல்கள் பாடியதில்லையே தவிர, அதன் ராகங்கள், நுணுக்கங்களை அறிவார். இப்படி முத்தமிழாக வாழ்ந்தவர் தான் அவர். அதனால்தான் முத்தமிழ்ப் பேரவையின் முகப்பில் அவரது சிலை வைக்கப்பட்டுள்ளது. 2.1.2020 அன்று கருணாநிதியின் சிலையினை நான் திறந்து வைத்தேன். அது அவரைப் பெருமைப்படுத்துவதற்காக அல்ல, அவர் மூலமாக முத்தமிழை வளர்ப்பதற்காகத்தான்.
இன்றைக்கு அவர் பெயரால் மதுரையில் உலகத்தரத்தில் நூலகம்அமைக்கப்பட்டுள்ளது என்றால் - அவர் பெயரால் சென்னை கிண்டியில் உயர்சிறப்பு மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது என்றால் -அதன் மூலமாக மக்களே அந்தப் பயனை அடைகிறார்கள். அவரை முன்வைத்து மக்கள் சேவையை, கலைத் தொண்டை ஆற்றி வரும் அரசாக இன்றைய தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.
இயல், இசை, நாடகத்தை காப்பாற்றுவது என்பது தமிழை காப்பாற்றுவது. தமிழினத்தை காப்பாற்றுவது. ஆனால் இன்று சிலர் தமிழுக்கும், தமிழர்களுக்கும் விரோதமான செயல்களை செய்து கொண்டே தமிழ் முகமூடியை போட்டுக் கொண்டு தமிழகத்தில் உள்ளவர்களை எல்லாம் ஏமாற்றிவிடலாம் என்று கணக்கு போடுகிறார்கள். ஆனால் அவர்கள் போடுவது எல்லாம் தப்பு கணக்குதான். அதை புரிய வைக்கும் வகையில், தமிழக மக்கள் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய மக்கள் அனைவரும் தக்க பாடத்தை புகட்டுவார்கள்.
இது போல ஏராளமான இசை விழாக்கள், இலக்கிய விழாக்கள் நடக்கவேண்டும். புதிய புதிய நாடகங்கள் அரங்கேற்றப்பட வேண்டும். ராஜாவைப் போன்ற பேச்சாளர்கள், மகதி, ராஜேஸ் வைத்யாவைப் போன்ற இசைக்கலைஞர்கள் ஏராளமாக உருவாக வேண்டும். அப்படி உருவானால்தான் பல்லாயிரம் ஆண்டு தமிழை, இன்னும் பல்லாயிரம் ஆண்டுக்குக் காப்பாற்ற முடியும். அரசியலில் இருக்கும் நாங்கள் அரசியல் தொண்டு மூலமாக தமிழ் வளர்ச்சிக்கு பணியாற்றுவோம். அதே போல கலைத்துறையில் இருக்கும் கலைஞர்கள், உங்கள் துறை மூலமாக தமிழ்க் கலை வளர்ச்சிக்கு பணியாற்ற வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்" என்று முதல்வர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...