

கோவை: “மணிப்பூரில் நடந்தது எந்தவொரு நபராலும், சகித்துக்கொள்ள முடியாத, ஜீரணிக்க முடியாத சம்பவம். எந்தக் காரணம் கொண்டும் இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்டிருப்பவர்களை மன்னிக்க முடியாது. அவர்களுக்கு என்ன கடுமையான தண்டனை இருக்கிறதோ, அதை வழங்கத்தான் வேண்டும்” என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
மத்திய அரசு பணிகளில் 70 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சியை காணொலி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை துவக்கிவைத்தார். கோவை ஹிந்துஸ்தான் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் நாராயண சுவாமி, பாஜக எம்எல்ஏவும், அக்கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் கலந்துகொண்டு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை வானதி சீனிவாசன் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "மணிப்பூர் சம்பவம் தொடர்பான வீடியோ, ஒட்டுமொத்தமாக மனித நாகரிகத்துக்கே எதிரான ஒரு விஷயமாக நாங்கள் அதைப் பார்க்கிறோம். எந்தவொரு நபராலும், சகித்துக்கொள்ள முடியாத, ஜீரணிக்க முடியாத சம்பவத்தை அந்த வீடியோவில் நாம் பார்த்தோம். எந்தக் காரணம் கொண்டும் இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்டிருப்பவர்களை மன்னிக்க முடியாது. அவர்களுக்கு என்ன கடுமையான தண்டனை இருக்கிறதோ, அதை வழங்கத்தான் வேண்டும்.
ஆனால், அதேநேரத்தில் இம்மாதிரியான சம்பவங்கள் நாட்டில் எந்த இடத்தில் நடந்தாலும், அது கட்சிப் பாகுபாடின்றி, மாநில - மத்திய அரசு பாகுபாடின்றி அத்தனை பேரும் ஏன், ஒட்டுமொத்த சமூகமும் எதிர்க்க வேண்டும். தேர்ந்தெடுத்து ஒரு சம்பவத்தை மட்டும் கண்டனத்துக்குரியதாக மாற்றுவதும், இதேபோல மற்ற சம்பவங்கள் நடக்கும்போது அமைதியாக வேடிக்கைப் பார்ப்பதும் அரசியல் கட்சிகளின் இரட்டை நிலைப்பாட்டைக் காட்டுகிறது. இந்தியாவில் எந்த இடத்தில் ஒரு பெண்மணி பாதிக்கப்பட்டாலும் அவர்களுடைய உரிமைக்காக, பாதுகாப்புக்காக பாஜகவின் குரல் எப்போதும் அரணாக இருக்கும்" என்று அவர் கூறினார்.