Published : 29 Nov 2017 09:33 AM
Last Updated : 29 Nov 2017 09:33 AM

நான் அணி மாறவில்லை.. ஆரம்பத்திலிருந்தே அதிமுககாரன்தான்- நவநீதகிருஷ்ணன் எம்.பி. சிறப்புப் பேட்டி

நவநீதகிருஷ்ணன் உள்ளிட்ட 3 அதிமுக எம்பிக்கள் தினகரன் அணியில் இருந்து பழனிசாமி - ஓபிஎஸ் அணிக்கு மாறிவிட்ட நிலையில், ‘நான் எந்த அணியில் இருந்தும் மாறிவரவில்லை. ஆரம்பத்தில் இருந்தே அதிமுககாரனாகத்தான் இருக்கிறேன்’ என்கிறார் நவநீதகிருஷ்ணன்.

சசிகலா மூலம் ஜெயலலிதாவுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டவர் நவநீதகிருஷ்ணன்.

இந்நிலையில், அவர் நேற்று முன்தினம், முதல்வர் பழனிசாமியை சந்தித்தார். இதுதொடர்பாக, ‘தி இந்து’வுக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டி.

சின்னம் தொடர்பான வழக்கில் தினகரன் அணிக்காக சட்ட உதவிகளைச் செய்து கொடுத்த நீங்கள், சின்னம் கிடைக்கவில்லை என்பதற்காக அணி மாறிவிட்டீர்களா?

முதலில் நீங்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். நான் 1972-ல் இருந்து அதிமுகவில் இருக்கிறேன். இதுவரை நான் இந்த அணியைச் சேர்ந்தவன் என என்னை அடையாளப்படுத்திக் கொண்டதில்லை. அதிமுகவுக்கு மட்டுமே விசுவாசமாக இருக்கிறேன். இரட்டை இலை வழக்கில், நான் தினகரன் அளித்த அஃபிடவிட்டுக்காக வாதாடவில்லை. கட்சித் தொண்டனாக நான் தனிப்பட்ட முறையில் அஃபிடவிட் தாக்கல் செய்தேன். கட்சியில் சசிகலாவுக்குத்தான் ஆதரவு இருக்கிறது என்பது அப்போது எனது வாதம்.

அதை வலியுறுத்தி, பழனிசாமி - ஓபிஎஸ் அணிக்கு எதிராகத் தான் நான் தேர்தல் ஆணையத்தில் வாதாடினேன். ஆனாலும், அந்த வாதத்தின் இறுதியில், ‘சாதாரண தொண்டனாக இருந்த எனக்கு பதவிகளைக் கொடுத்து உயர்த்தியவர் ஜெயலலிதா. எனவே, நான் இறக்கும் போதும் அதிமுககாரனாகவே இறக்க விரும்புகிறேன். எனவே, இந்த வழக்கின் இறுதியின் இரட்டை இலை எங்கு இருக்க வேண்டும் என ஆணையம் சொல்கிறதோ அங்குதான் நான் இருப்பேன்’ என்று தெளிவாகக் குறிப்பிட்டேன்.

தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பு சரியானதா; இதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா?

அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்டு ஆணையம் ஒரு தீர்ப்பைச் சொல்லி இருக்கிறது. ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில், நீதிமன்ற ஆணையாக இருந்தாலும் தேர்தல் ஆணைய உத்தரவாக இருந்தாலும் அதற்கு நான் கட்டுப்படுவதுதான் சரி.

மோடி தமிழக அரசை ஆட்டிவைப்பதாக சொல்லப்படுவது குறித்து உங்கள் கருத்து?

இந்த அரசை வெளியில் இருந்து ஆட்டி வைக்கிறார்கள் என சொல்வது கற்பனை. பாரதப் பிரதமர் அதுமாதிரி செயல்படக் கூடியவர் அல்ல.

மனங்கள் இணையவில்லை என மைத்ரேயன் கூறினார். அதிமுகவுக்குள் அணி பூசல்களும் நீடிக்கிறதே?

பூசல்கள் இருக்கத்தான் செய்யும். அம்மா என்ற சக்தி இல்லை. அதனால், அனைவரும் தலைவனாக வேண்டும் என ஆசைப்படுகிறார்கள். அப்படி ஆசைப்படுவது அரசியலில் இயல்பு. இது தவறு என்று சொல்ல எனக்கு உரிமையில்லை. ஆனால், நான் எனது எல்லையை எப்போதும் தாண்ட மாட்டேன்.

உங்களோடு இன்னும் இரண்டு எம்பி-க்களும் அணி மாறியிருக்கிறார்களே?

திருத்திக் கொள்ளுங்கள். நான் அணி மாறவில்லை. அதிமுககாரனாக தொடர்கிறேன். தமிழக அரசு என்ன சொல்கிறதோ, அதிமுக அமைச்சர்கள் என்ன சொல்கிறார்களோ அதன்படிதான் டெல்லியில் நான் செயல்பட்டிருக்கிறேன். இப்போதுகூட, பொதுப் பிரச்சினைக்காகத்தான் நான் முதல்வரைச் சந்தித்தேன். மற்ற 2 எம்பிக்கள் எதற்காக வந்தார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. அது அவர்களைத்தான் கேட்க வேண்டும்.

ஆர்.கே.நகர் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும்?

நான் அதிமுககாரன். அங்கே அதிமுகதான் ஜெயிக்கும். ஜெயிக்க வேண்டும்.

ஜெயலலிதா இல்லாத அதிமுக - இப்போது இதை நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?

ஐயோ.. உலகமே மயானமாகிவிட்ட மாதிரி தெரிகிறது. அவங்க நேரடிக் கண்காணிப்பில் எப்படி எல்லாம் வாழ்ந்தேன் என எண்ணிப் பார்க்கிறேன். இப்போது சுடுகாட்டில் இருப்போதுபோல் உணர்கிறேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x