

மதுரை: மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலக வாசகர்களுக்கு விரைவில் ஸ்மார்ட் கார்டு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நூலக நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலக வாசகர்களுக்கு விரைவில் ஸ்மார்ட் கார்டு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என, நூலக நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மதுரை - புது நத்தம் சாலையில் ரூ.215 கோடியில் அமையப்பெற்ற கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 15-ம் தேதி திறந்து வைத்தார். இந்நூலகத்தில் ரூ.60 கோடிக்கு மேல் வாங்கிய சுமார் 3.5 லட்சம் புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன.
குழந்தைகள், போட்டித் தேர்வர்கள், ஆராய்ச்சி மாணவர்கள், நாளிதழ் வாசித்தல் போன்ற பல்வேறு தொகுதி வாரியாக நூல்கள் ரேக்குகளில் அடுக்கி வைப்பட்டுள்ளன. ஒவ்வொரு பகுதியிலும் நூலகர்கள், ஊழியர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.
இந்நூலகத்தின் பயன்பாடு தொடங்கிய நிலையில், 15-ம் தேதிக்கு பிறகு பொதுமக்கள், பெண்கள், தமிழ் ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், போட்டித் தேர்வர்கள், குழந்தைகள், பள்ளி மாணவ, மாணவிகளின் வருகை அதிகரித்துள்ளன. மாணவர்கள் தவிர, தினமும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வருகின்றனர். சென்னை அண்ணா நூலகத்தில் இருந்து சுமார் 25க்கும் மேற்பட்ட அலுவலர்கள், ஊழியர்கள் வந்துள்ளனர். இவர்களில் தென் மாவட்டங்களைச் சேர்ந்த சிலர் பணி மாறுதலும் பெற்று வந்துள்ளனர். தற்போது, நூலகத்தைப் பயன்படுத்துபவர்கள் காட்டிலும் பார்வையிட வருவோர் அதிகம் என்றாலும், குறிப்பிட்ட நாளுக்கு பிறகு பராமரிப்புக்கென குறித்த தொகை கட்டணம் வசூலிக்கலாம் என்ற திட்ட மும் இருப்பதாக நூலக நிர்வாகம் தரப்பு தெரிவிக்கிறது.
நூலக அதிகாரி ஒருவர் கூறியது, ''மதுரையில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்துக்கு மிகுந்த வரவேற்பு உள்ளது. நூலகத்தை முறையாக அதிகமானோர் பயன்படுத்தும் வகையில், அதற்கான சில பணிகளும் நடக்கின்றன. நூலகப் பயன்பாட்டாளர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதன்மூலம் வாசகரின் அனைத்து விவரமும் கணினியில் பதிவு செய்யப்படும். நூல்களை வீட்டுக்கு எடுத்துக்கொண்டு போய் படிக்க, வசதி செய்யப்படும். ஒன்றும் மேற்பட்ட படிகள் இருக்கும் நூல்கள் மட்டுமே வெளியில் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படும்.
யாருக்கு புத்தகம் தேவையோ அவர் பற்றிய தகவல்கள் முன்கூட்டியே கம்ப்யூட்டரில் பதிவிட்டு, சம்பந்தப்பட்ட புத்தகத்தை கணினி தகட்டில் வைக்கும்போது, 15 நாளுக்கு திருப்பி வழங்க வேண்டும் போன்ற விவரங்களை தானாக குறிப்பிடும் விதமாக தொழில் நுட்பம் மற்றும் நூல் இரவல், இணையவழி , யூடியூப், சமூக ஊடங்களின் மூலம் செயல்படுத்துதல் போன்ற பல்வேறு ஏற்பாடுகள் செய்கிறோம். என்னென்ன புத்தகங்கள் இருக்கின்றன என்பதை தமிழ், ஆங்கிலம் வாரியாக கணினியில் பதிவிட்டு வருகிறோம். தமிழ் நூல்கள் பற்றிய விவரம் முடிந்தது. நவீன தொழில்நுட்பத்துடன் அதிகமானோர் பயன்படுத்தும் விதமாக இந்த நூலகம் மாற்றப்படும்.
தற்போது, நூலகத்துக்கு தேவையான அலுவலர்கள், ஊழியர்கள் என, 30க்கும் மேற்பட்டோர் அண்ணா நூலகத்துக்கு இருந்து வந்துள்ளோம். மேலும், தேவைப்பட்ட ஊழியர்கள் அவுட்சோர்சிங் முறையில் நியமிக்கப்பட்டுள்ளனர். போதுமான ஊழியர்கள் இருக்கின்றனர். இருப்பினும், மேலும் தேவை இருப்பினும் நூலகத்துறை பற்றிய கல்வித் தகுதியின் அடிப்படையில் போட்டித்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்'' என்றார்.