வருமான வரித் துறையினர் மீது தாக்குதல்: 15 திமுகவினரின் ஜாமீனை ரத்து செய்யக் கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

வருமான வரித் துறையினர் மீது தாக்குதல்: 15 திமுகவினரின் ஜாமீனை ரத்து செய்யக் கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு
Updated on
1 min read

மதுரை: கரூரில் வருமான வரித் துறை அதிகாரிகளை தாக்கிய 15 திமுகவினருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

கரூரில் மே 25-ல் அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக்குமார் வீட்டில் வருமான வரி சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது வருமான வரி அதிகாரிகளை தாக்கி ஆவணங்களை பறித்து சென்றதாக திமுகவினர் மீது புகார் அளிக்கப்பட்டது. போலீஸார் வழக்கு பதிவு செய்து திமுகவினர் பலரை கைது செய்தனர். இவர்களில் 15 திமுகவினர் கரூர் நீதிமன்றத்தில் ஜாமீன், முன்ஜாமீன் பெற்றனர். இதனை ரத்து செய்யக் கோரி வருமான வரித் துறை சார்பில் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

வருமான வரித் துறை தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் வாதிடுகையில், ''சோதனைக்கு சென்ற வருமான வரித் துறை அதிகாரிகளிடமிருந்து 2 வாரண்ட் நகல், 2 அரசு முத்திரைகள், 3 வழக்கு தொடர்பான அரசு ஆவணங்கள், ஒரு பென்டிரைவ் ஆகியவற்றை பறித்துச் சென்றனர். அந்த பென்டிரைவில் இருந்த தகவல்கள் அழிக்கப்பட்டுள்ளது. ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள், சொத்து பத்திரங்கள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. இது மிகப் பெரிய குற்றமாகும். இதனால் ஜாமீன், முன்ஜாமீனை ரத்து செய்ய வேண்டும்'' எனக் கூறப்பட்டது.

திமுகவினர் சார்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ வாதிடுகையில், ''சோதனைக்கு சென்ற வருமான வரித் துறை அதிகாரிகள் அடையாள அட்டையை காண்பிக்காமல் சென்றுள்ளனர். இதனால் சிறிய வாக்குவாதம் நடந்துள்ளது. இதனால் ஜாமீன், முன்ஜாமீனை ரத்து செய்யக் கூடாது'' என்றார். பின்னர், தீர்ப்புக்காக வழக்கை ஜூலை 27ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in