

உடுமலை: உடுமலை சுற்று வட்டாரத்தில் போக்குவரத்து விதிகளை மீறி சரக்கு வாகனங்களில் ஏற்றிச்செல்லப்படும் கூலித்தொழிலாளர்களின் உடமைக்கும், உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
உடுமலை நகரை மையமாக கொண்டு திருப்பூர், தாராபுரம், பழநி, பொள்ளாச்சி, மூணாறு, கொழுமம், எலையமுத்தூர், ஆனைமலை உள்ளிட்ட முக்கிய வழித்தடங்கள் வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இதில் பண்ணைக் கோழி உற்பத்தி தொழிலுக்காக அதிகளவில் சரக்கு வாகனங்கள் இயக்கப்படுகின்றன.
இத்தகைய வாகனங்களில் கோழிகளை அடைத்து பத்திரமாக எடுத்துவர பயன்படும் பிளாஸ்டிக் பெட்டிகளுக்கு அளிக்கும் முக்கியத்து வத்தைக்கூட, அதில் பயணிக்கும் கூலி தொழிலாளர்களின் உயிருக்கு அளிப்பதில்லை. பாதுகாப்பற்ற பயணத்தையே தினமும் அனுபவித்து வருவதாக புகார் எழுந்துள்ளது.
இது குறித்து ‘இந்து தமிழ் திசை' நாளிதழின் ‘உங்கள் குரல்’ தொலைபேசி பதிவில் செல்வன் என்பவர் கூறியிருப்பதாவது: பல ஆண்டுகளாகவே இதுபோன்ற செயல்கள் நடைபெற்று வருகின்றன. இது கடுமையான தண்டனைக்குரிய குற்றம். கறிக்கோழிகளை ஏற்றி செல்லும் வாகனங்களில் கூலி தொழிலாளர்கள் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்படுவதில்லை.
மாறாக,சரக்கு லாரியின் பின் பக்க கதவை பாதி திறந்த நிலையில் அதில் அமரவைக்கப்பட்டும், அல்லது நின்று கொண்டு செல்லும் நிலையே உள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த விபத்தில்அப்பாவி கூலித் தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற நிகழ்வுகள் நடந்தவுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதும், அதன் பின் கண்டுகொள்ளாமல் இருப்பதும் தொடர் நிகழ்வாக உள்ளது.
ஆபத்தான முறையில் வாகனங்களை முந்திச் செல்வது, தொழிலாளர்களின் உயிருக்கும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. இது குறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, விதிமீறும் வாகனங்கள் மீதும், அதன் உரிமையாளர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.