Published : 21 Jul 2023 06:43 AM
Last Updated : 21 Jul 2023 06:43 AM
உடுமலை: திருப்பூர் மாவட்டம் குண்டடம் அருகே சாலையோரம் உள்ள தேநீர் கடைக்குள் சிமென்ட் லாரி புகுந்ததில், லாரி ஓட்டுநர் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். கல்லூரி மாணவர் உட்பட 3 பேர் காயமடைந்தனர்.
தூத்துக்குடியிலிருந்து சிமென்ட் ஏற்றிய கன்டெய்னர் லாரி, மேட்டூர் நோக்கி நேற்று காலை சென்று கொண்டிருந்தது. சேலம் மாவட்டம் மேட்டூர் நாவலப்பட்டியைச் சேர்ந்த ரத்தினகுமார்(28) என்பவர் ஓட்டினார். திருப்பூர் மாவட்டம் குண்டடம் அடுத்த சூரியநல்லூர் பேருந்து நிறுத்தம் அருகே தாராபுரம் சாலையில் காலை 7.30 மணியளவில் சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையோரம் இருந்த உயரழுத்த மின்கம்பத்தின் மீது மோதி, அருகிலுள்ள தேநீர் கடைக்குள் புகுந்தது.
மின்கம்பத்தில் மோதிய வேகத்தில் லாரியின் முன்பக்க கேபினின் மேல்பகுதி கழன்று சாலையில் விழுந்தது.
இந்த விபத்தில் தேநீர் கடையில் தேநீர் குடித்து கொண்டிருந்த கோப்பணகவுண்டம் பாளையத்தை சேர்ந்த தொழிலாளி தோழான் (எ) சுப்பிரமணி (80), விவசாயி கோவிந்தசாமி (75), ராமநாதபுரத்தை சேர்ந்த விவசாயி முத்துசாமி (65), எஸ்.காஞ்சிபுரத்தை சேர்ந்த தொழிலாளி செல்லாத்தாள் (65) மற்றும் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த வெருவேடம்பாளையத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் மகேந்திரன்(19) ஆகியோர் காயமடைந்தனர். சிமென்ட் ஏற்றிவந்த கன்டெய்னர் லாரியின் இடிபாடுகளுக்குள் ஓட்டுநர் ரத்தினகுமார் சிக்கிக் கொண்டார்.
சம்பவ இடத்துக்கு குண்டடம் போலீஸார் சென்று, பொதுமக்கள் உதவியுடன் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். செல்லும் வழியிலேயே தோழான் (எ) சுப்பிரமணி, முத்துசாமி, கன்டெய்னர் லாரி ஓட்டுநர் ரத்தினகுமார் ஆகியோர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். காயமடைந்த மேலும் 3 பேர், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
மின்கம்பத்தில் லாரி மோதிய வேகத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
லாரி ஓட்டுநர் உறங்கியதால் விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். இதுதொடர்பாக குண்டடம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT