

தமிழின் முதல் புதினமான ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ நூலைப் படைத்தமைக்காக புகழ்பெற்றவர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை. இவர் திருச்சி மாவட்டம் குளத்தூரில் 1826-ல் பிறந்தார். தமிழ், ஆங்கில மொழிகளுடன் கூடிய கல்வியை தியாகராச பிள்ளையிடம் பயின்றார்.
நீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பாளர், பதிவாளராகப் பணியாற்றினார். மாயவரம் நகர்மன்றத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். வீணை வாசிப்பதில் வல்லவர். 1805 முதல் 1861 வரையிலான நீதிமன்றத் தீர்ப்புகளை ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்த்து சித்தாந்த சங்கிரகம் என்ற நூலாக வெளியிட்டார். சட்ட விதிகளைத் தொகுத்து ஆங்கிலத்தில் முதலில் வெளியிட்டார்.
இவரது கட்டுரைகள், பெண் கல்வி, தாய்மொழிப் பற்று, கடவுள் பக்தி, நல்லாட்சி, நீதி நெறிகள் என பல அம்சங்களையும் உள்ளடக்கியவை. தமிழகத்தின் முதல் பெண்கள் பள்ளியைத் மாயவரத்தில் தொடங்கினார்.
தமிழகத்தில் பஞ்சம் ஏற்பட்டபோது, தன் சொத்துளை தானமாக வழங்கினார். குழந்தை திருமணம், உடன்கட்டை ஏறும் வழக்கத்தை கடுமையாக எதிர்த்தார். ’மறுமலர்ச்சிக் கவிஞர்’ என போற்றப்படும் வேதநாயகம் பிள்ளை 1889 ஜூலை 21-ம் தேதி காலமானார்.