Published : 21 Jul 2023 06:08 AM
Last Updated : 21 Jul 2023 06:08 AM
சென்னை: நுங்கம்பாக்கத்தில் போலீஸ் எஸ்ஐ ஒருவர் ரோந்து காவலரை தாக்கி உள்ளார். இந்த சம்பவம் காவல் துறைவட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை திருவொற்றியூர், போக்குவரத்து காவல் பிரிவில் எஸ்.ஐ.யாக (உதவி ஆய்வாளர்) பணிபுரிபவர் ஜெயப்பிரகாஷ் (27). பரங்கிமலை ஆயுதப்படை பிரிவில் பணியாற்றிய இவருக்கு சமீபத்தில் போக்குவரத்து காவல் பிரிவில் பணி இடமாற்றம் கிடைத்துள்ளது. இந்த சந்தோஷத்தை கொண்டாடும் வகையில் ஜெயப்பிரகாஷ், நேற்றுமுன்தினம் இரவு நண்பர்களுடன் மது அருந்தியதாக கூறப்படுகிறது.
பின்னர் தனது இருசக்கர வாகனத்தில் நுங்கம்பாக்கம் சென்ற ஜெயப்பிரகாஷ், அங்கு தனக்கு நன்கு பழக்கமான ஒருவரைச் சந்தித்துள்ளார். அவர்கள் இருவரும் சாலையில் இருட்டு பகுதியில் நீண்ட நேரம் நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இரவு ரோந்து வந்த நுங்கம்பாக்கம் காவல் நிலைய காவலர் கதிர்காமனுக்கு (27) சந்தேகத்தை ஏற்படுத்தியது. எஸ்ஐ ஜெயபிரகாஷ் சீருடையில் இல்லாததால் அவரை சாதாரண நபர் என நினைத்து,காவலர் கதிர்காமன் சற்று கடுமையாக கண்டித்தாராம்.
இதனால் கோபம் அடைந்த எஸ்ஐ ஜெயப்பிரகாஷ், கதிர்காமன் கன்னத்தில் அறைந்து தாக்கியதாக தெரிகிறது. தகவலறிந்து போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடம் விரைந்து விசாரணை மேற்கொண்டனர். அதன்பிறகே ஜெயபிரகாஷ், தான் எஸ்ஐ என தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக துறை ரீதியிலான விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் மது போதையில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்ததாக எஸ்ஐ ஜெயபிரகாசுக்கு போலீஸார் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனர். போலீஸார் இருவர் மோதிக்கொண்ட சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT