Published : 21 Jul 2023 05:57 AM
Last Updated : 21 Jul 2023 05:57 AM
சென்னை: பஞ்சாயத்து சட்டத்தின்படி பட்டாநிலத்தை மயானமாகப் பயன்படுத்த முடியாது என்றும், மயானம்என அறிவிக்கப்பட்ட இடத்தில்தான் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்ற முழு அமர்வு தீர்ப்பளித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், நொச்சிலி கிராமத்தை சேர்ந்த பாபு நாயுடு என்பவர், உயர் நீதிமன்றத்தில் ஏற்கெனவே தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘ எங்களது கிராமத்தில், இறந்தவர்களின் உடலை எரிக்கவும், அடக்கம் செய்யவும் தனியாக மயானம் உள்ளது. ஆனால் எங்களது கிராமத்தைச் சேர்ந்த ஜெகதீஷ்வரி என்பவர், இறந்த அவரது கணவரின் உடலை சட்ட விரோதமாக பட்டா நிலத்தில் புதைத்துள்ளார். இதுதொடர்பாக அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை” என தெரிவித்து இருந்தார்.
இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, பட்டா நிலத்தில் அடக்கம் செய்யப்பட்டவரின் உடலை தோண்டியெடுத்து, மயானத்தில் அடக்கம் செய்வதற்கான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும். இதற்கான செலவுத்தொகையை ஜெகதீஷ்வரியிடமிருந்து வசூலிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து ஜெகதீஷ்வரி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இறந்தவரின் உடலை பட்டா நிலத்தில் அடக்கம் செய்ய முடியுமா, முடியாதா என்பது குறித்த இந்த வழக்கு மீதான விசாரணை தலைமை நீதிபதி உத்தரவுப்படி நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜி.ஜெயச்சந்திரன், முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய முழு அமர்வில் நடந்தது.
ஒதுக்கப்பட்ட இடத்தில்... வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘‘பஞ்சாயத்து சட்ட ரீதியாக மயானம் என ஒதுக்கப்பட்ட அல்லது அறிவிக்கப்பட்ட இடத்தில்தான் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய வேண்டும். பட்டா நிலத்தில் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய முடியாது.
எனவே. சட்ட விரோதமாக பட்டாநிலத்தில் புதைக்கப்பட்ட மனுதாரரின் கணவரின் உடலைத் தோண்டியெடுத்து மயானத்தில் புதைக்க வேண்டும். பொது சுகாதாரத்துக்கு எதிராக, விதிகளை மீறி பட்டா நிலங்களில் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்திருந்தால் அதை மாற்றுவதற்கான செலவுத் தொகையையும் சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து வசூலிக்க வேண்டும்” என தீர்ப்பளித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT