Published : 25 Jul 2014 10:00 AM
Last Updated : 25 Jul 2014 10:00 AM

தமிழ்நாட்டில் சிறுசேமிப்பு இலக்கு ரூ.11 ஆயிரம் கோடி: தேசிய சேமிப்பு நிறுவன மண்டல இயக்குநர் தகவல்

நடப்பு நிதி ஆண்டில் தமிழ்நாட்டில் சிறுசேமிப்பு இலக்கு ரூ.11 ஆயிரம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தேசிய சேமிப்பு நிறுவன மண்டல இயக்குநர் பி.ராஜுபாபு தெரிவித்தார்.

சேமிப்பு தின விழா

அரசு ஊழியர்களின் சம்பளத் தில் இருந்து நேரடியாக பிடித்தம் செய்து சேமிப்பு திட்டங்களில் பணம் செலுத்தப்படுவது ‘பே ரோல் சேவிங்ஸ்’ என அழைக்கப்படுகிறது. இந்த சேமிப்பு திட்டத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 15-ம் தேதி ‘பே ரோல் சேவிங்ஸ்’ தினமாக கொண்டாடப்படுகிறது.

அதன்படி தேசிய சேமிப்பு நிறுவனம் சார்பில் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள சென்னை பொருளியல் கல்வி நிறுவனத்தில் வியாழக்கிழமை ‘பே ரோல் சேவிங்ஸ்’ தினம் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் தேசிய சேமிப்பு நிறுவன மண்டல இயக்குநர் பி.ராஜுபாபு பேசியதாவது:

சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்ய விரும்பும் அரசு ஊழியர்கள் தங்கள் சம்பளத்தில் இருந்து அதற்கான தொகையை பிடித்தம் செய்துகொள்ளலாம் என்று தங்கள் தலைமை அதிகாரிக்கு ஒரு அனுமதி கடிதம் கொடுத்தால்போதும். ‘பே ரோல் சேவிங்ஸ்” திட்டத்தில் மாதாமாதமோ, 3 மாதங்களுக்கு ஒருமுறையோ, சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்பட்டு தபால் அலுவலகத்தில் செலுத்தப்பட்டுவிடும்.

அரசு சேமிப்பு திட்டத்தைப் பொறுத்தவரையில், தனியார் சேமிப்பு திட்டங்களைப் போல் அல்லாமல், சேமிக்கப்படும் தொகைக்கும், முதிர்வுத்தொகைக்கும் 100 சதவீதம் உத்தரவாதம் உண்டு. 2013-2014-ம் நிதி ஆண்டில் நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியில் (ஜிடிவி) சேமிப்பின் பங்கு 30.1 சதவீதமாக இருந்தது. அதேபோல், சிறுசேமிப்பு திட்டங்கள் மூலம் வசூலான தொகை ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் கோடி ஆகும். நடப்பு நிதி ஆண்டில் சிறுசேமிப்பு இலக்கு ரூ.2 லட்சத்து 39 ஆயிரத்து 248 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த நிதி ஆண்டில் சிறுசேமிப்பு வசூல் ரூ.9,600 கோடி ஆகும். 2014-2015-ம் நிதி ஆண்டில் சேமிப்பு இலக்கு ரூ.11 ஆயிரம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சேமிப்பு திட்டங்களுக்கு தமிழக அரசு அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது.

இவ்வாறு ராஜுபாபு கூறினார்.

சென்னை பொருளாதார கல்வி நிறுவன இயக்குநர் கே.ஆர்.சண்முகம் இந்நிகழ்ச்சியில் பேசும்போது, “பொருளாதார மந்தநிலை காரணமாக சேமிப்பு வீதம் குறைய ஆரம்பித்தது. பொருளாதார தேவை காரணமாக, சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்கள் அந்த பணத்தை திரும்பப் பெற்று வருவது தற்போது அதிகரித்துள்ளது” என்று குறிப்பிட்டார்.

முன்னதாக நிகழ்ச்சிக்கு வந்தவர்களை சென்னை பொருளியல்கல்வி நிறுவன நிர்வாக அதிகாரி டி.வி.சுப்ரமணியன் வரவேற்றார். நிறைவாக தேசிய சேமிப்பு நிறுவன சென்னை துணை இயக்குநர் பிரமோத் டாண்டீ நன்றி கூறினார். இந்த விழாவில், பொருளியல் கல்வி நிறுவன மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.

இதுவரை 4.64 கோடி பேருக்கு ஆதார் அட்டை

சேமிப்பு தின விழாவில் இந்திய அரசின் மக்கள்தொகை கணக்கெடுப்பு இணை இயக்குநர் எம்.ஆர்.வி.கிருஷ்ண ராவ் தலைமை தாங்கிப் பேசும்போது கூறியதாவது:

தமிழ்நாட்டில் தேசிய மக்கள்தொகை பதிவேட்டில் (என்பிஆர்) 6.74 கோடி பேரின் விவரங்களை பதிவுசெய்ய வேண்டியிருந்தது. இதில் 4.91 கோடி பேரின் விவரங்கள் பதிவுசெய்யப்பட்டுவிட்டன. இன்னும் 1.82 கோடி பேரின் விவரங்கள் மட்டுமே என்பிஆர் பதிவேட்டில் பதிவுசெய்யப்பட வேண்டும்.

என்பிஆர்.-ல் பதிவுசெய்யப்பட்டால்தான் ஆதார் அடையாள அட்டை வழங்க முடியும். அந்த வகையில், இதுவரை 4 கோடியே 64 லட்சத்து 83 பேருக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. எஞ்சிய நபர்களுக்கு விரைவில் ஆதார் அட்டை வழங்கப்படும். தமிழக அரசு போலி ரேஷன் அட்டைகளை ஒழிக்கும் வகையில் மின்னணு அட்டை (பயோ-மெட்ரிக் ரேஷன் கார்டு) வழங்க திட்டமிட்டுள்ளது. அதற்கு என்பிஆர் பதிவு அவசியம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x