Published : 13 Nov 2017 10:18 AM
Last Updated : 13 Nov 2017 10:18 AM

மதுராந்தகத்தில் நல்லூர் ஏரி உடைந்து விளை நிலங்களில் வெள்ளம்: விவசாயிகள் குற்றச்சாட்டு

காஞ்சிபுரம் மதுராந்தகம் அடுத்த நல்லூரில் ஊராட்சி ஒன்றிய ஏரியன் 2வது மதகு பகுதி உடைந்து வெளியேறிய தண்ணீர், விளை நிலங்களை சூழ்ந்துள்ள நிலையில் அதிகாரிகளின் அலட்சிய உடைப்பிற்கு காரணம் என விவசாயிகள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் ஒன்றியம் நல்லூர் ஊராட்சி பகுதியில் ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் 110 ஏக்கர் பரப்பளவில் ஏரி ஒன்று அமைந்துள்ளது. இந்த ஏரியின் மூலம், 200 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்நிலையில், மதுராந்தகம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால், மதுராந்தகம் பெரிய ஏரி மற்றும் ஊராட்சி ஒன்றியத்தின் பராமரிப்பில் உள்ள ஏரிகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.

இதில், கனமழை காரணமாக நல்லூர் ஊராட்சியின் ஏரி முழுகொள்ளலவை எட்டியது. இந்நிலையில், ஏரியின் 2வது மதகில் ஏற்பட்டிருந்த பழுது காரணமாக கடந்த சில நாட்களாக தண்ணீர் கசிந்து வந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக, அப்பகுதி விவசாயிகள் ஊராட்சி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் தெரிவித்ததாகவும். ஆனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், நல்லூர் ஏரி நேற்று அதிகாலை மதகு பகுதி பலவீனமடைந்து உடைந்ததாக தெரிகிறது.

இதனால், ஏரியிலிருந்த தண்ணீர் முழுவதும் அருகில் உள்ள விளை நிலங்களை சூழ்ந்தது. இதில், 5 ஏக்கர் நெற் பயிர்கள் சேதமடைந்துள்ளன. தகவல் அறிந்த மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலர் எல்வின் தலைமையிலான அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஜேசிபி இயந்திரம் மூலம், ஏரியின் உடைந்த பகுதியை சீரமைத்து மணல் மூட்டைகளை அடுக்க தடுப்புகளை ஏற்படுத்தினர். இதனால், ஏரியிலிருந்து தண்ணீர் வெளியேறுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. எனினும், ஏரியிலிருந்து பெருமளவான தண்ணீர் வெளியேறி உள்ளது.

இதுகுறித்து, நல்லூர் பகுதி விவசாயிகள் கூறியதாவது: ஏரிநீரை நம்பியே இப்பகுதியில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், கனமழையினால் ஏரி நிரம்பியதால் விவசாயிகள் தங்களது நிலங்களில் ஏர் உழுதல் மற்றும் நாற்று நடுதல் போன்ற முதற்கட்ட பணிகளை தொடங்கினர். ஆனால், ஏரி உடைந்து தண்ணீர் வெளியேறியதால் விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

மேலும், நாற்று விடப்பட்டிருந்த நிலங்கள் மற்றும் ஏர் தயார் நிலையிலிருந்த விளை நிலங்கள் தண்ணீரில் முழ்கியுள்ளதால், தண்ணீர் எப்போது வடியும் என காத்திருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஏரியிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ள மதகு பகுதி சேதமடைந்துள்ளது என தகவல் தெரிவித்தும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கததாலேய உடைப்பு ஏற்பட்டுள்ளது என்றனர்.

இதுகுறித்து, மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வின் கூறியதாவது: நல்லூர் ஏரியின் உடைந்த மதகு பகுதியை மணல் மூட்டைகள் மற்றும் சவுக்கு மரங்களை கொண்டு தடுப்புகளை ஏற்படுத்தியுள்ளதால், தண்ணீர் வெளியேறுவது நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், உடைப்பினால் வெளியேறிய தண்ணீர் வாழைப்பட்டு ஏரிக்கு சென்றதால், ஏரி நிரம்பியுள்ளது. மதகு பகுதியை சீரமைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு ஏற்புடையதல்ல என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x