Published : 30 Nov 2017 04:27 PM
Last Updated : 30 Nov 2017 04:27 PM

நாகர்கோவிலுக்கு தண்ணீர் தரும் முக்கடல் அணை முழு கொள்ளளவை எட்டியது

 

நாகர்கோவில் நகராட்சிக்குட்பட்ட மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்குவது முக்கடல் அணை. கடந்த சில ஆண்டுகளாகவே போதிய பருவ மழை இல்லாததால் முக்கடல் அணை வறண்டு போய் கிடந்தது. இடையில் சில நாள்கள் அணையின் நீர்மட்டம் மைனஸ் லெவலுக்குச் சென்றது. இதனால், நாகர்கோவில் நகருக்கு போதியளவில் குடிநீர் கிடைக்காமல், நாகர்கோவில் நகரவாசிகள் கடுமையாக அவதிப்பட்டனர்.

இதையடுத்து, நாகர்கோவில் நகர மக்களின் தாகம் தீர்க்கும் வகையில் பேச்சிப்பாறை அணையில் இருந்து நாகர்கோவில் நகருக்கு குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. மேலும் புத்தன் அணையில் இருந்து நாகர்கோவில் நகருக்கு குடிநீர் எடுப்பதற்கு திட்டமிடப்பட்டது. இதற்கு மாவட்ட விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

மேலும் இதற்கு மாற்றுத் திட்டங்களாக உலக்கை அருவி திட்டத்தை செயல்படுத்த வேண்டும், முக்கடல் அணையின் கொள்ளளவை அதிகப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.

புத்தன் அணையில் இருந்து தண்ணீர் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்களிலும் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், ஓகி புயலால் பெய்த பலத்த மழையால் முழு கொள்ளளவான 25 அடியை முக்கடல் அணை நேற்று எட்டியது. இதனால் நிகழாண்டு கோடை காலத்தில் நாகர்கோவிலுக்கு போதுமான குடிநீர் தங்கு தடையின்றி கிடைக்கும் என, நகராட்சி அதிகாரிகள் நம்புகின்றனர்.

இந்த அடைமழை, வாட்டி வதைத்த சூறைக்காற்று, உயிர் சேதங்கள், கட்டிடங்கள் சேதம் ஆகியவற்றுக்கு மத்தியில் முக்கடல் அணை நிரம்பியது, ஒரே ஆறுதலாக உள்ளது.

பிற்பகல் 2.30 மணி நிலவரம்---அணைகளில் நீர்மட்டம்.

பேச்சிப்பாறை - 31.40

பெருஞ்சாணி - 62.10

சிற்றாறு 1 - 11.64

சிற்றாறு 2 - 11.74

முக்கடல் - 25.00

பொய்கை - மைனஸ் 4.70

மாம்பழத்துறையாறு - 47.65

மழையளவு(மில்லி மிட்டர்)

முக்கடல் அணை - 42 . பேச்சிப்பாறை அணை - 32, கோழிப்போர் விளை - 56.6 குருந்தன்கோடு- 38 , சிற்றாறு 1 அணை - 12 , ஆனைக்கிடங்கு - 34. பெருஞ்சாணி அணை- 44.6 , சிற்றாறு 2 அணை - 9.2 , மாம்பழத்துறையாறு அணை - 76, அடையாமடை - 57, முள்ளங்கினாவிளை- 70 , புத்தன் அணை- 43.2 , திற்பரப்பு- 37.4 நாகர்கோவில் - 41 , பூதப்பாண்டி - 25.3 , சுருளோடு - 65.4 , கன்னிமார் -168 , ஆரல்வாய்மொழி- 38 , கொட்டாரம் - 56.4 , மயிலாடி - 55

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x